மாகாணசபை தேர்தலில் கூட்டணியாக போட்டியிட ஐ.தே.கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்
58Shares

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஐக்கிய தேசியக் கட்சியை புதிய கூட்டணியின் கூட்டாளியாக இணைந்து மாகாணசபை தேர்தலில் ஒன்றாக போட்டியிட அழைப்பு விடுத்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

இந்த செய்தி ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தாம் அமைக்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் சேர ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கூட்டணியின் பங்காளிகளாக இரண்டு கட்சிகளும் ஒப்பந்தத்தை மேற்கொண்டால் இரண்டு கட்சிகளும் ஒன்றாக மாகாணசபை தேர்தலில் போட்டியிட முடியும்.

ஏற்கனவே புதிய ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்த்தனவிடம் இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

எனினும் கட்சிக்கு தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னரே இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக பேச முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைப்பதே சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.