ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான எந்த முடிவும் எடுக்கவில்லை! அரசாங்கம்

Report Print Ajith Ajith in அரசியல்
74Shares

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகிக்கொள்ளும் எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச தகவல் திணைக்களம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஊகடத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் பிழையான புரிதல்கள் ஏற்பட்டுள்ளமையை அடுத்தே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொள்ளும் என்று அமைச்சர் கூறவில்லை.

இலங்கை தொடர்பான 30-1 நல்லிணக்க யோசனையின் அனுசரணையில் இருந்து விலகிக்கொள்வதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 30-1 யோசனையின் அனுசரணையில் இருந்து கடந்த பெப்ரவரியில் விலகிக்கொண்ட இலங்கை கடந்த மார்ச் மாத அமர்வின்போது அதனை அறிவித்தது.

இதற்கிடையில் 30-1 அனுசரணையில் இருந்து விலகிக்கொண்டதன் மூலம் இலங்கையின் புதிய அரசாங்கம் தமது உறுதிமொழிகளை நிறைவேற்றும் என்பதில் தமக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பச்லெட் கடந்த திங்கட்கிழமை பேரவை அமர்வின்போது தெரிவித்திருந்தார்.

எனினும் அதற்கு பதிலளித்திருந்த இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.