20வது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி விரைவில் முடிவை அறிவிக்கும்: திகாம்பரம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உயர்பீடம் விரைவில் கூடி ஆராய்ந்து முடிவை அறிவிக்கும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்ட மூலம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு என்னவென்று வினவியபோதே பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

"அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் சமுகத்தில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேற்படி சட்டமூலத்திலுள்ள உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். எமது மலையக புத்திஜீவிகளுக்கும் கருத்துகளை முன்வைப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தச்சட்ட மூலத்திலுள்ள சில சரத்துகள் தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே ஒருமித்த நிலைப்பாடு இல்லை. ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி திருத்தப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என்றார்கள். ஆனால், பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின் போதே திருத்தப்படும் என தற்போது அறிவித்துள்ளனர். எனவே, எவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது எமக்கு தெரியாது.

பாராளுமன்றத்தில் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உயர்பீடம்கூடி 20 தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும். ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. அதனையே நாமும் விரும்புகின்றோம் என்றார்.