அரசாங்கத்துடன் இணைய தயாராகும் எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்துடன் இணைய எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற அணி ஒன்று தயாராகி வருவதாக தெரியவருகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சியை சேர்ந்த சிலர் இவ்வாறு அரசாங்கத்துடன் இணைய எதிர்பார்த்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

இவர்களில் சிலர் தனியாகவேனும் அரசாங்கத்துடன் இணைய போவதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவித்துள்ளனர்.

அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்பார்த்துள்ளனர்.

இந்த கட்சியின் தலைவர் றிசார்ட் பதியூதீனின் ஆதரவை மாத்திரம் எந்த காரணம் கொண்டும் பெற்றுக்கொள்வதில்லை என அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையே இதற்கு காரணம். எவ்வாறாயினும் அந்த கட்சியை சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக வந்து அரசாங்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

அதேபோல் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய தயாராகி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் இந்த கட்சிகளுக்கு ஆளும் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வ அழைப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதுடன் கட்சியாக இன்றி தனி நபர்களாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் தலைவர்களது நிலைப்பாடாக இருப்பதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.