அரசு தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் செயற்படுகின்றது! அங்கஜன் எம்.பி

Report Print Murali Murali in அரசியல்

அரசு தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுகின்றது என்பது அப்பட்டமான பொய் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“அரசாங்கம் அவ்வாறு பாகுபாடு காட்டவில்லை என்பதை பல சந்தரப்பங்களில் அரசின் செயற்பாடுகளே உணர்த்தியிருக்கின்றன.

குறிப்பாக யாழில் மக்கள் வீட்டு திட்டத்திற்காக போராடிய போது அதனை அறிந்த பிரதமர் உடனடியாகவே உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணித்திருந்தார்.

தமிழ் மக்கள் மீது அக்கறையில்லாவிட்டால் அப்படி செய்திருக்க மாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதுபோலவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.

எதனை அடக்குமுறை என்று சொல்கின்றார்கள் என்று பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அரசின் மீது குற்றம்சாட்ட வேண்டும் என்பதற்காக இவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்கள்.

இன்று இவர்கள் குற்றம்சாட்டுபவை அனைத்தும் கடந்த ஆட்சியிலும் இடம்பெற்றுள்ளது.

அப்போது அரசிற்கு கூட்டமைப்பு ஆதரவை வழங்கிக்கொண்டிருந்ததால் அந்த விடயங்கள் நல்லிணக்க அரசு, நல்லாட்சி அரசு என்று பெயர் சூட்டியிருந்தனர்.

இப்போது இந்த அரசாங்கத்துடன், கூட்டமைப்பு இல்லாததால் தமிழர்களுக்கு எதிரான அரசாக காட்ட முனைகின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.