பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள பிள்ளையான்

Report Print Kumar in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் இன்று கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காகவே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மேலும், கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.