மக்கள் சேமித்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் ஆபத்து! பயங்கர வேலைத்திட்டம் குறித்து தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள 10 ஆயிரம் பில்லியன் ரூபா பணத்தில் ஒரு தொகையை கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா பதிலளித்துள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள ஹர்ச டி சில்வா, சில தினங்களுக்கு முன்னர் மத்திய வங்கியின் நிதிச்சபையின் இரண்டு பிரதான அதிகாரிகளை நீக்கி விட்டு, புதிதாக இரண்டு பேரை நியமித்தனர்.

தமது அணியினரை மத்திய வங்கியில் நியமித்து நிதி நிர்வாகத்தை அரசியல் கட்சிக்கு ஏற்ற வகையில் நிர்வகிக்க இவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கான பின்னணி தற்போது முற்றாக உருவாக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வு ஆணைக்குழு இரத்துச் செய்யப்பட்ட பின்னர், மத்திய வங்கியின் கணக்காய்வு சம்பந்தமாகவும் 20ஆவது திருத்தச் சட்டத்தில் பல வரையறைகளை கொண்டு வர தயாராகி வருகின்றனர்.

வங்கிகளில் உள்ள 9 ஆயிரம் பில்லியன் ரூபாயையும் நிதி நிறுவனங்களில் உள்ள ஆயிரம் பில்லியன் ரூபாயையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முயற்சித்து வருகின்றனர்.

இது மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்த பணம். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதில் பெரிய ஆபத்து உள்ளது. கப்ராலுக்கு இது பற்றி நன்றாக தெரியும்.

இறுதியில் என்ன நடந்தது சாதாரண மக்கள் 150, 180, 200 ரூபாய் என கொள்வனவு செய்த பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

மக்களின் பணத்தை தமக்கு தேவையான வகையில் முதலீடு செய்ய தயாராகி வரும் பயங்கரமான வேலைத்திட்டமாக இது எமக்கு தெரிகிறது.

மக்களின் பணத்துடன் விளையாட இவர்களுக்கு இடமளிக்க போவதில்லை என்பதை வலியுறுத்தி கூறி வைக்க விரும்புகிறோம் எனக் கூறியுள்ளார்.