20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்ற காரணத்தை அடிப்படையாக கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மக்களின் இறையாண்மையை பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களின் இறையாண்மையை குறைக்கும் 20ஆவது திருத்தச் சட்டம் மக்களை பலியெடுக்க முயற்சிக்கும் பிசாசு, எமனாக கருதி அதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.