தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு என்றும் நீடித்து நிலைக்க வேண்டும்!சம்பந்தன் தெரிவிப்பு

Report Print Rakesh in அரசியல்

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவை நான் மனதார வரவேற்கின்றேன் இந்த ஒன்றிணைவு என்றும் நீடித்து நிலைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் மக்கள் தங்கள் இன விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூற உரிமையுண்டு. அதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தற்போது தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தமிழ் மக்கள் நினைவுகூறுவதற்குப் பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தை வைத்து ராஜபக்ச அரசு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதற்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எடுத்துள்ள நடவடிக்கையை நான் வரவேற்கின்றோம்.

அந்தக் கட்சிகளின் கடிதத்தில் உள்ள கோரிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

கடந்த ஆட்சியைப் போல் இந்த ஆட்சியிலும் நினைவேந்தல்களைத் தமிழர்கள் சுதந்திரமாகக் கடைப்பிடிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.