20வது திருத்தத்தை திரும்பப் பெற்றுக்கொள்வது தொடர்பில் எவ்வித முடிவுகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை!ஜி.எல் பீரிஸ்

Report Print Ajith Ajith in அரசியல்

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை திரும்பப் பெற்றுக்கொள்வது தொடர்பில் எவ்வித முடிவுகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை என அமைச்சர் ஜி.எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தேவைப்பட்டால், நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் அதில் திருத்தங்கள் செய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

2020,செப்டெம்பர் 17 ம் திகதியன்று நாடாளுமன்றத்தின் தினக்குறிப்பில் சேர்க்கப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தம், நாடாளுமன்றத்தில் நாளை 22ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தத்தை முன்வைத்த ஒரு வாரத்திற்குள், ஆர்வமுள்ள தரப்பினர் அதனை உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த வாய்ப்பு உள்ளது.

இந்தநிலையில் சவாலான விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானதா என்பதை நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் தீர்மானிக்கும்.

பின்னர், நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது, 20ஆவது திருத்தத்துக்கு மேலதிக திருத்தங்களை கொண்டு வரமுடியும்.இதேவேளை, சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படாது.

ஆனால் 20ஆம் திருத்தத்தின் கீழ் ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள் நாடாளுமன்ற பேரவையின் அவதானிப்புகளின் பின்னர் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் என்றும் ஜி.எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.