இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா தலையிடக்கூடாது! ஜனாதிபதி திட்டவட்டம்

Report Print Murali Murali in அரசியல்

நாட்டின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடக்கூடாது என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது உயர்மட்டக் குழு கூட்டத்தில் காணொளி ஊடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“உலகம் ஒரு பொதுவான ஓர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகளே எமக்கு தேவை.

அதேசமயம் நாடுகளின் இறைமை தொடர்பான சமத்துவம், ஆள்புல ஒருமைப்பாட்டை மதித்தல் ஆகியவற்றின் உள்விடயங்களில் தலையிடாமை போன்றவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படும்” என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது உச்சி மாநாடு இன்று இரவு 7.45 மணிக்கு நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் காணொளி தொழில்நுட்பம் மூலம் தொடங்கப்பட்டது.

இலங்கை நேரப்படி இரவு 9.45 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றினார்.

180 நாடுகளின் தலைவர்கள் காணொளி தொழில்நுட்பம் மூலம் உரையாற்றினர் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

“கொரோனா தொற்று நோய் நாடுகளின் பொருளாதாரத்தையும், சுகாதார அமைப்புகளையும் முடக்கியுள்ளது. அத்துடன், முழு உலகத்தையும் பாதித்துள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒரு சாத்தியமான தலையீட்டின் ஊடாக கொரோனா தொற்று வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டது.

இலங்கையில் முதல் நோயாளி அடையாளம் காண்பதற்கு முன்பே, கொரோனா தடுப்பு தேசிய நடவடிக்கை குழு நியமிக்கப்பட்டது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த அமைப்பில் சுகாதாரம், பாதுகாப்பு துறைகள் மற்றும் தேசிய, பிராந்திய சிவில் அதிகாரிகள் அடங்குவர்.

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் மீட்பு விகிதம் 90 வீதத்திற்கும் அதிகமாக உள்ளது, இது உலகளாவிய மீட்பு விகிதத்தை விட அதிகமாகும்.

“அடையாளம் காணப்படல் மற்றும் தனிமைப்படுத்தல் அந்த வெற்றியின் பின்னால் உள்ள மிக சக்திவாய்ந்த சக்தி” என்றும் ஜனாதிபதி கூறினார்.

கடந்த ஒரு மாதத்தில் உள்நாட்டில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை” எனவும் ஜனாதிபதி இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்.