அரசு எம்மை ஏமாற்றினால் மாற்று வழியை கையிலெடுப்போம்! சம்பந்தன எச்சரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

ராஜபக்ச அரசினால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாது, பொறுப்புக்கூறலை செய்யாது எம்மை ஏமாற்றி அனைத்தையும் தட்டிக்கழித்து விடமுயாது.

அவ்வாறான போக்கில் சென்றால் நாம் மாற்று வழியை கையிலெடுப்போம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கேள்வி - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 9வது நாடாளுமன்றின் கொள்கைப் பிரகடன உரையின் போது, ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை பிரதிபலித்திருக்கும் நிலையில், அதிகாரப் பகிர்வு உள்ளடக்கத்தை மையப்படுத்திய சமஸ்டி அடிப்படையிலான தீர்வொன்றை அடைய முடியும் என்று நம்பிக்கை கொள்கின்றீர்களா?

பதில் - ஜனாதிபதியின் ஒரு சில வார்த்தையின் அடிப்படையில் நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுத்துவிட முடியாது. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் 70 ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் ஒரு விடயமாக இருக்கின்றது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்திய, ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் பேரவை, சர்வதேச நாடுகள், உள்ளிட்ட தரப்புகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

விசேடமாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடடைமுறைப்படுத்துவதுடன், அதன் மீது ஆக்கபூர்வமான அதிகாரப் பகிர்வைக் கட்டியெழுப்பி அதனை நடைமுறைப்படுத்துவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

இதனைவிடவும், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதற்கு இந்தியாவிடமும், சர்வதேசத்திடமும் உதவிகளை கோரிய போது ராஜபக்சவினர் பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றார்கள்.

குறிப்பாக விடுதலைப் புலிகளுடன், பேச்சுவார்த்தை ரீதியாக இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியாது.

ஆகவே அவர்களை இராணுவ ரீதியாக தோற்கடித்த பின்னர் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுகளை மேற்கொண்டு அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வை வழங்குவோம் என வாக்குறுத்தி அளித்துள்ளார்கள்.

அவ்விதமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது தொடர்ந்தும் இருக்க முடியாது. அந்த அடிப்படையில், ஜனாதிபதியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது.

ஆனால் அரசமைப்பு உருவாக்கப்படுகின்ற போது தற்போதைய ஆட்சியாளர்கள் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வை முன்வைக்க வேண்டியது அவர்களின் கடமையாகின்றது.” என கூறியுள்ளார்.