சர்வாதிகாரியை உருவாக்க தயாராகும் பொதுஜன பெரமுன - குமார வெல்கம

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சர்வாதிகார ஜனாதிபதியை உருவாக்க தயாராகி வருகிறது என்பதை தான் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரின் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தற்போது ஏன் கொண்டு வரப்படுகிறது. 19 வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாங்கள் அனைவரும் கைகளை உயர்த்தினோம்.

நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

ஜே.ஆர். ஜெயவர்தன உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தில் அப்படியான விடயங்கள் இல்லை. ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியலமைப்புச் சட்டத்தில் இதனை விட அதிகாரங்கள் குறைவு.

தற்போது ஜனாதிபதிக்கு முழுமையான சர்வதிகார பலத்தை வழங்க முயற்சிக்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திற்குள் இருப்பார்கள்.

இலங்கையை சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாமல் போகும். சர்வாதிகார அரசாங்கமே உருவாக போகின்றது என்பதை நான் அன்று சத்தமிட்டு கூறினேன். சர்வாதிகார ஜனாதிபதி உருவாக போகிறார். நான் அன்று கூறியதையே தற்போதும் கூறுகிறேன் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.