ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி. பதவி எனக்கு உரிமையானது - ஜோன் அமரதுங்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு உரிமையானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் விரைவில் அந்த பதவிக்கு தன்னை நியமிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அந்த பதவிக்கான உரிமை எனக்கே உள்ளது. கட்சியின் தலைவர் அதனை தீர்மானித்து நியமனத்தை வழங்க வேண்டும். அவர் அதனை விரைவில் செய்வார் என எதிர்பார்க்கின்றேன். நான் சத்தமிட்டு, சண்டையிட்டு, அதனை பறிக்க முயற்சிக்க மாட்டேன்.

எனது உரிமை உள்ளபடி கிடைக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.

நான் 42 ஆண்டுகள் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளேன். மூன்று, நான்கு ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பது எனக்கு பெரிய விடயமல்ல எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் ஜோன் அமரதுங்கவின் பெயரே முதலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.