20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பிரதமர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை - மகிந்த அமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை எனவும் இது தொடர்பாக பிரதமரும், ஜனாதிபதியும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமரவீர இதனை கூறியுள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். இதன் பின்னர் நீதிமன்றத்திற்கு செல்ல ஒரு வாரம் காலம் அவகாசம் உள்ளது. இதன் பின்னரும் மூன்று வார காலம் அவகாசம் உள்ளது.

அப்போது நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்க முடியும். ஜனாதிபதி சிறப்பாக விடயங்களை தெளிவுப்படுத்தினார். அடிப்படை வரைவில் செய்ய வேண்டிய திருத்தங்களை செய்து, நிறைவேற்றப்படும் நாளில் நிறைவேற்றுவோம்.

இது சம்பந்தமாக பிரதமரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார். அந்த விடயங்களையும் கவனத்தில் கொண்டே செயற்பட போவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை. பிரதமரும் ஜனாதிபதியும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர்.

பிரதமர் நியமித்த குழுவின் பரிந்துரைகள் தூக்கி எறியப்படவில்லை. குழுவின் கருத்துக்களை ஜனாதிபதியிடம் முன்வைத்ததாக நீதியமைச்சர் கூறினார். தேவையான வகையில் அவற்றை செய்வார்கள்.

பிரதமர் கோபத்தில் இருப்பதாக நாங்கள் உணரவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் செயற்பட்டனர். இதன் காரணமாகவே அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை.

மிகவும் இணக்கத்துடன் செயற்பட்டனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையில் எந்த மாற்றத்தையும் உணரவில்லை. இந்த திருத்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திற்கும் மேலான ஆதரவுடன் நிறைவேற்றப்படும். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் இதற்கு ஆதரவளிப்பார்கள் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.