மைத்திரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கருதி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், சட்டத்தரணி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியம் குறித்து முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கை சம்பந்தமாக, ஹேமசிறி பெர்ணான்டோவின் சட்டத்தரணி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு நீதித்துறை சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுத்து வருவதால், அந்த நடவடிக்கைகளை வெளி நபர்கள் விமர்சித்துள்ளதால், அதனை நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும் எனவும் அந்த சட்டத்தரணி கூறியுள்ளார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தான் இந்த ஊடக அறிக்கை சம்பந்தமாக எதனையும் அறிந்திருக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதியுடன் விசாரித்து விட்டு பதிலளிப்பதாக கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் வெளியிடப்பட்டதாக வெளியாகி இருந்த ஊடக அறிக்கை அவரது தனிப்பட்ட செயலாளரின் கையெழுத்தில் வெளியிடப்பட்டிருந்தது.