ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

Report Print Steephen Steephen in அரசியல்

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் இதனை கூறியுள்ளனர். விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அறிவிப்பை அடுத்து கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.யு. ஜயசூரிய, வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.