முன்னாள் ஜனாதிபதி மற்றும் பேராயர் சார்பில் ஊடக அறிக்கை வெளியிட்டவர்களை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவு

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட செயலாளர் சமீர டி சில்வா மற்றும் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் ஊடக அறிக்கையை வெளியிட்ட மூன்று உதவி பேராயர்களை, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவர்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு தமது சட்டத்தரணிகள் அல்லது தனிப்பட்ட ரீதியில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, இந்த ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியம் அவதூறானது மற்றும் பொய்யானது எனக் கூறி கடந்த 20 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சமீர டி சில்வா ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த ஊடக அறிக்கை காரணமாக தமது தரப்பு வாதி அச்சத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் ஊடக அறிக்கை ஆணைக்குழுவின் சட்ட ரீதியான அதிகாரத்தை தரம் தாழ்த்தியுள்ளதாகவும் ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, தமது தரப்பு வாதி வெளியிட்ட ஊடக அறிக்கையானது அதற்கு முன்னர் பேராயர் சார்பில் வெளியிட்ட ஊடக அறிக்கைக்கு இணையானது எனக் கூறியிருந்தார்.