மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் எம்மை தாக்க முடியாது - சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்
293Shares

அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால், எதிர்க்கட்சியை சுற்றிவளைத்து தாக்க சந்தர்ப்பம் கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணை கிடைத்துள்ளதால், தாம் விரும்பியதை செய்ய முடியும் என்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கூறுவது ஊடகங்களில் கேட்க முடிகிறது. நாட்டுக்கு நன்மையான விடயங்களை செய்யவே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கினர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது என்பதற்காக அனைத்தையும் செய்ய முடியாது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சியில் இருப்பவர்களில் ஒருவரை சுற்றிவளைக்க மூன்று பேரை பயன்படுத்த முடியும் என்று கூறினார். ஒருவருக்கு மூன்று பேரை பயன்படுத்த மூன்றில் இரண்டு அல்ல நான்கில் மூன்று பெரும்பான்மை இருக்க வேண்டும்.

நான் தனியாக ஆளும் கட்சியின் முன்வரிசையில் உள்ளவர்களை தாக்க தயாராக இருக்கின்றேன். இரண்டாவது வரிசையில் இருப்பவர்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்தவை பயன்படுத்தலாம். சமிந்தவின் தாக்குதலின் சுமை அறிந்தவர்கள் ஆளும் கட்சியில் உள்ளனர்.

மூன்றாவது வரிசையில் தயாசிறி ஜயசேகர போன்ற கராத்தே அறிந்தவர்கள் இருப்பதால், நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவே பயன்படுத்தலாம். அவர் கராத்தேயில் கறுப்பு பட்டியை பெற்றவர். மூன்றில் இரண்டு இருக்கின்றது என்பதற்காக எங்களை சுற்றிவளைத்து தாக்க தயாராக வேண்டாம் என நாங்கள் கூறுகிறோம் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.