நோர்வே தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் முக்கிய சந்திப்பு

Report Print Dias Dias in அரசியல்

வடக்கு - கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்ற களப்பு நீர் நிலைகளில நீர் வேளாண்மைய விருத்தி செய்வதற்கு நோர்வே அரசாங்கத்தின் ஆரோக்கியமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் றைன் ஜொனார்லி எஸ்கெண்டல் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சரினால் குறித்த கருத்து வெளியிடப்பட்டள்ளது.

இச்சந்திப்பின் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

கடந்த காலங்களில் நோர்வே நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் அங்கம் வகித்து சென்ற போது, நவீன தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் நீர் வேளாண்மையில் நோர்வே வெற்றிகரமாக செயற்பட்டு வருவதை தன்னால் அவதானிக்க முடிந்ததாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இலங்கையில் வடக்கு - கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் சுமார் 92 களப்பு நீர்நிலைகள் காணப்படுகின்ற நிலையில் நோர்வே அரசாங்கம் குறித்த விடயத்தில் தன்னுடைய பொருளாதார மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்குவதுடன் தமது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார்.

அமைச்சரின் குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நோர்வே தூதுவர், ஏற்கனவே இலங்கையின் கடற்றொழில் சார் அபிவிருத்தி திட்டங்களுக்கு நோர்வே பெருமளவு நிதியினை செலவிட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் அமைச்சர் கேட்டுக் கொண்டதைப் போன்று தொழில் நுட்ப உதவி உட்பட்ட உதவிகளை வழங்குவததோடு அனுபவங்களை தொடர்ந்தும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாவும் தெரிவித்தார்.

மேலும், கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்களிலும் நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்துடனும் தொடர்ந்தும் இணைந்து செயற்பட நோர்வே அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் நோர்வேயில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்ற மீன்பிடிப் படகுகளை உருவாக்குதல் மற்றும் மீன்களை பழுதடையாமல் பாதுகாத்து பதனிடுதல் மற்றும் களஞ்சிப்படுத்தல் செயற்பாடுகளை இலங்கையில் விருத்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குதவற்கும் நோர்வே ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சரிடம் கேட்டறிந்த நோர்வே தூதுவர், இதேபோன்ற அனுபவம் நோர்வேக்கும் ரஸ்யாவிற்கும் இடையில் காணப்படுவதாக சுட்டிக் காட்டியதுடன், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் வளங்களைப் பாதுகாத்து பகிர்ந்து கொள்வது தொடர்பில் புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது என்று தெரிவித்ததுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையில் குறுகிய நீர்ப்பரப்பே காணப்படுவதனால் இவ்வாறான அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது சவாலான விடயமாகவே இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இருநாட்டுக் கூட்டுறவுக் கொள்கைக்கு அமைவாக கடற்றொழில் அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளர்ப்பு கொள்கைக்கு உருவாக்கத்திற்கு உதவியமைக்காக நோர்வே அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்த அமைச்சர், குறித்த கொள்கை தொடர்பான திட்ட வரைபிற்கும் நோர்வேயின் ஒத்துழைப்பை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.