சுங்க திணைக்களத்திடம் தங்கத்தை கோரியது கடற்டை: ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்

Report Print Steephen Steephen in அரசியல்

அனுராதபுரம் சந்தஹிரு சேய தாதுகோபுரத்தில் வைப்பதற்காக புத்தர் சிலை ஒன்றை செய்ய அன்றைய பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுங்க திணைக்களத்திடம் இருந்து தங்கத்தை கோரவில்லை என சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜகத் விஜேவீர தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் சம்பந்தமாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த பணிக்காக தங்கத்தை வழங்குமாறு கடற்படையே கோரியது. கடற்படையினர் சட்டரீதியாகவே அந்த கோரிக்கையை விடுத்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தஹிரு சேய தாதுகோபுரத்தை நிர்மாணிக்க சட்டவிரோத தங்கம் கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வழக்கு தாக்கல் செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் மூலம் தான் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டதாக கூறி ஜகத் விஜேவீர, இந்த ஆணைக்குழுவில் செய்திருந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த முறைப்பாட்டில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊழல் எதிர்ப்பு குழுவின் உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க உட்பட அந்த குழுவின் உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முறைப்பாடு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.