20வது திருத்தம் தொடர்பான விடயங்கள், சமூகத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும்! ஜே.வி.பி கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

20வது அரசியலமைப்பு திருத்தத்தின் செல்லுபடித் தன்மையை சரிபார்க்க நீதிமன்றத்தின் பங்கு இல்லை என்று கூறப்படுகின்ற நிலையில், அரசியல் பிரச்சனையாக கருதி 20வது திருத்தம் தொடர்பான விடயங்கள், சமூகத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

இந்த திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட வேண்டுமா போன்ற தொழில்நுட்ப அம்சங்களை மட்டுமே நீதிமன்றம் ஆலோசித்து வருவதாக ஜே.வி.பியின் பிமல் ரத்நாயக்க இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

20க்கு எதிராக ஏன் ஜே.வி.பி நீதிமன்றத்துக்கு செல்லவில்லை என்று ஆளும் கட்சியினர் கேட்கின்றனர்.

இந்த திருத்தத்தின் காரணமாக மக்கள் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை மட்டுமல்ல, அவர்கள் தங்கள் உயிரைக் கூட பணயம் வைக்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே இதனை நீதிமன்றத்தில் தீர்ப்பதைக்காட்டிலும் சமூகத்தில் தீர்க்கப்படவேண்டும் என்று பிமல் ரட்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஜனநாயக விரோத திருத்தம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இதை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இதனை தோற்கடிக்க முடியாவிட்டால் மக்கள் மத்தியில் கொண்டு சென்று இதனை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக பிமல் ரட்நாயக்க குறிப்பிட்டார்.

20வது திருத்தம், தாய் இல்லாத குழந்தையைப் போன்றது, அங்கு வரைவுக்கான தயாரிப்பு பொறுப்பை யாரும் ஏற்க முன்வரவில்லை. இது ஒரு முற்போக்கான திருத்தமாக இருந்தால், உரிமையை கோர நிறைய பேர் இருப்பார்கள்.

எனினும் இந்த திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிகாரத்தை பலப்படுத்த மட்டுமே உதவுகிறது என்பதால் யாரும் இதற்கு உரிமைக்கோர முன்வரவில்லை என்றும் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.