மக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் மூலம் தடுக்கவே இருபதாவது திருத்தம்! இம்ரான்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்
47Shares

மக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் மூலம் தடுக்கவே இருபதாவது திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிதி ஆணைக்குழு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசாங்கம் நாட்டில் செய்ய வேண்டிய அவசர வேலைகள் எத்தனையோ இருக்கும் போது, நாட்டில் விலைவாசி கூடி மக்கள் வாழ்வதற்கு கஷ்டப்படும் போது, கொவிட் 19 காரணமாக எமது தொழிலாளர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பிழந்து நாடு திரும்ப முடியாமல் தத்தளிக்கும் போது, இனவாத நடவடிக்கைகளால் எம் மூவின மக்களதும் ஒற்றுமை சீர்குலைந்துள்ள போது, ஒரே நாடு ஒரே சட்டம் என்று கோஷமிட்ட போதும், மதகுரு என்ற அடையாளத்தை சுமந்த சிலர் அரச பணியாளர்களை , பொலிஸாரை தாக்குகின்ற காடைத்தனத்தை செய்கின்றபோது , காடுகளை அரசியல்வாதிகளும், அவர்களது பினாமிகளும் அழிக்கின்றபோது, 100 வருடங்களுக்கும் மேற்பட்ட வயதுடைய தேசத்தின் சொத்துக்களான மரங்கள் தேசத்துரோகிகளால் வெட்டப்படுகின்ற போது,இந்த அரசாங்கம் தனது அதிகார வெறிக்கு தீனிபோடும் 20 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை முன்வைத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முறையான வேலைத்திட்டம் எதனையும் கொண்டிராத நிலையில் மக்கள் இன்னும் சில நாட்களில் தமக்கெதிராக கிளர்ந்து எழுந்தால் அதை அடக்கி சர்வாதிகாரமாக நாட்டை ஆளக்கூடிய வகையிலான ஆட்சியை உருவாக்கவே அரச தரப்பு முனைகின்றது.

இதேபோன்று கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத 18 ஆம் அரசியலமைப்பு மாற்றத்தை கிழக்கு மாகாண சபையில் எதிர்த்த ஒரே முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் இன்றும் பெருமைப் படுகின்றேன்.

இந்த 20 ஆம் திருத்தத்தையும் மக்களுக்காக, ஜனநாயகத்தையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக எதிர்க்கின்றேன் என்பதில் மேலும் திருப்தி அடைகின்றேன்.

என்னை இந்த உயர் சபைக்கு தெரிவு செய்த மக்களின் அடிப்படை அபிலாஷையான “உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் உன்னத பணியை” இதன்மூலம் செய்கின்றேன் என்று என்னை தெரிவு செய்த மக்களும் திருப்தி கொள்வார்கள் என நம்புகின்றேன்.

நாம் மக்கள் அதிகாரத்தை பறிக்கும், அவர்களது சுதந்திரத்தையும், உரிமையையும் சர்வாதிகாரத்திடம் ஒப்படைக்கும் இந்த 20ஆம் அரசியலமைப்பை முடியுமான சகல வழிமுறைகளாலும் எதிர்ப்போம்.

மக்கள் மன்றமான இந்த நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தும் இந்த 20 எமக்கு தேவையில்லை. இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்துக்கு என்ன தடை இருக்கிறது?

கடந்த தேர்தல்களில் ஜனாதிபதியும், பிரதமரும் வெவ்வேறு கோணத்தில் இயங்கும் இந்த நல்லாட்சியை தோற்கடித்து எமக்கு அதிகாரம் தாருங்கள் என்று மக்களிடம் கேட்டீர்கள்.

மக்களும் அதை நம்பி உங்களுக்கு அதிகாரம் தந்துள்ளார்கள். ஒரே குடும்பம் ஒரே சகோதரர்கள் தானே பிரதமரிடம் அதிகாரம் இருந்தாலும் ஜனாதிபதியின் நாட்டை சுபீட்சமாக்கும் திட்டங்களுக்கு அவர் ஒத்துழைப்பார் தானே என்று மக்கள் நம்பினார்கள்.

அப்படியானால் இப்போது எதற்காக இந்த எதேச்சதிகார 20ஆம் திருத்தம் தேவைப்படுகிறது ?

ஜனாதிபதியும், பிரதமரும் கடந்த நல்லாட்சியில் போன்று முரண்பட்டுக்கொண்டு நாட்டை முன்கொண்டு செல்ல முடியாமல் தடுமாறுகின்றார்களா? ஜனாதிபதி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் தடையாக உள்ளாரா? அல்லது பிரதமர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி முட்டுக்கட்டை போடுகின்றாரா? அப்படி இருந்தால் ஒரு நியாயம் இருக்கும்.

இல்லாமல் எதற்கு தனிமனிதரின் கையில் அதிகாரத்தை குவிக்க வேண்டும்? தனிமனிதரை அல்லாமல் , மக்கள் பிரதிநிதிகளின் மன்றத்தையே நாம் பலப்படுத்த வேண்டும்.

எனவே நாட்டு பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை மீறும் இந்த 20ஆம் திருத்தம் சர்வஜன வாக்கெடுப்புக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.