அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கட்சிகள் ஓரணியில் நின்று செயற்படுவது நல்ல சகுனமாகும்!

Report Print Theesan in அரசியல்

காலத்தின் தேவை கருதி கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழ்த் தேசியக்கட்சிளும் ஓரணியில் நின்று குரல் கொடுக்கத்தொடங்கியிருப்பது நல்ல சகுனமாகும். இவ்வாறான கருத்தொருமித்த செயற்பாட்டை தமிழரசின் இளைஞர் அணி வரவேற்கின்றதென இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவர் சி.சிவதர்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக காலம் காலமாக அரசியல் கட்சிகள், போராட்ட அமைப்புகள் தொடர்ந்தும் போராடி வந்துள்ளன. நோக்கங்கள் ஒன்றாக இருப்பினும் துரதிஸ்டவசமாக கட்சி அரசியலை முன்னிறுத்தி அவ்வப்போது கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து நிற்பது தமிழ் மக்களின் அரசியல் இருப்பை மேலும் அதளபாதாளத்தில் தள்ளவிடும்.

குறிப்பாக சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளி அறுதிப்பெருமான்மையுடன் ஆட்சிப்பீடமேறியுள்ள இந்த அரசு தமிழ் மக்களின் எதிர்கால இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையே சட்டச்சவாலுக்குட்படுத்தி மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றது.

தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரிந்து நின்றால் அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும்.

இவ்வாறான சூழ்நிலையில் கருத்து வேறுபாடுகளை புறம்தள்ளி தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அனைத்து தமிழ் தேசியக்கட்சிகளும் ஓரணியில் நின்று செயற்படுவது வரவேற்ககூடியதொன்றாகும்.

இந்த ஒற்றுமை தொடர வேண்டுமென்பதே அனைத்து தமிழ் மக்களினதும் விருப்பமாகும். தற்போதைய அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து தமிழ் கட்சிகள் ஓரணியில் நின்று குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பது நல்ல சகுனமாகும்.

இந்த ஒற்றுமை தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரையாவது நிலைத்து நிற்க வேண்டும். இதனை அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பிரிந்து நிற்பது எதிரிக்கு சாதகமாகவே அமையும்.

இவ்வாறானதொரு அரசியல் களநிலையில் அரசின் ஜனநாயக விரோத போக்கினை கண்டித்து தமிழர் தேசமான வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வருகின்ற 26ம் திகதி நடைபெறவுள்ள உண்ணா நோன்பு நிகழ்விற்கும், அதனை தொடர்ந்து 28ம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக முடக்க போராட்டத்திற்கும் அனைத்து தமிழ் உணர்வாரள்களின் ஆதரவை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினராகிய நாம் கோரி நிற்கின்றோம் என அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.