கொழும்பில் முன்னெடுக்கப்படவிருந்த அபிவிருத்தித் திட்டம்! தடை உத்தரவு பிறப்பித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய

Report Print Murali Murali in அரசியல்

கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள லைட் ரயில் செயற்திட்டத்தை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2.2 பில்லியன் டொலர் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இச்செயற்திட்டத்தை உடனடியாக இடைநிறுத்தி, இரத்து செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த லைட் ரயில் திட்டமானது அதிக செலவீனமிக்கதாக உள்ளதுடன், கொழும்பு நகர போக்குவரத்து உட்கட்டமைப்பிற்கு பொருத்தமான செலவு குறைந்த போக்குவரத்து தீர்வாகவும் இது அமையாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .

லைட் ரயில் திட்டமானது பொதுப் போக்குவரத்துத்துறையில் போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் மற்றும் பாதுகாப்பு மிக்க திட்டமாக முன்வைக்கப்பட்டது.

17 கிலோ மீற்றர் மற்றும் 16 நிலையங்களை உள்ளடக்கிய பாரிய போக்குவரத்துத் திட்டமாக இது அமைந்திருந்ததுடன், கொழும்பு கோட்டை முதல் மாலபே வரை முன்னெடுக்கப்படவிருந்தது.

மேலும் முன்னைய அரசினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இதற்கான உடன்படிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டமானது வெளிநாட்டு முதலீடுடன் அரச மற்றும் தனியாரின் பங்குடைமையுடன் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நீர் விநியோக மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு இவ்வாண்டு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.