திலீபன் நினைவேந்தலில் தமிழ் மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டவில்லை: தென்னிலங்கையில் எம்.ஏ.சுமந்திரன்

Report Print Dias Dias in அரசியல்

திலீபன் நினைவேந்தலை நடத்த வேண்டுமென்ற அதிகளவு உணர்வு தமிழ் மக்களிடம் தற்போது இருப்பதாக தெரியவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தியாகி திலீபன் நினைவேந்தலை நடத்தக் கூடாதென யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 பேரில் யாரும் என்னை முன்னிலையாகும்படி கோரவில்லை. வழக்கொன்றில் முன்னிலையாகுவதெனில் அந்த தரப்பினர் சட்டத்தரணியை அணுக வேண்டும் அப்படி அணுகாததால் நான் முன்னிலையாகவில்லை.

கடந்த முறை யாழ்.மாநகரசபை முதல்வர் ஆனல்ட் என்னை தொடர்பு கொண்டு முன்னிலையாகும் படி கேட்டுக் கொண்டார். அதனால் முன்னிலையானேன். நினைவேந்தலிற்கு நீதிமன்றம் அனுமதித்தது. அடுத்த முறையும் அனுமதித்தது.

இதே நீதிமன்றம் தான் நினைவேந்தலிற்கு அனுமதியளித்தது. அந்த வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டியிருந்தாலே நினைவேந்தலிற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும்.

நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே, என்னை ஆனல்ட் அணுகினார். ஆனால், அனைத்தும் முடிந்த பின்னரே அவர் அணுகினார். அதனால் பலனிருக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க வேண்டுமென மக்கள் தன்னெழுச்சியாக விரும்பியிருந்தனர்.

மாறாக திலீபன் நினைவேந்தலை நடத்த வேண்டுமென்ற அதிகளவு உணர்வு தமிழ் மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை.

சில அரசியல் கட்சிகள் அதை ஒழங்கு செய்கிறார்கள். ஆனால், நினைவேந்தலை செய்யும் உரிமை தமக்கு இருப்பதாக மக்கள் உணர்கின்றார்கள். யாராவது நினைவேந்தலை ஒழுங்கமைத்தால் மக்கள் அதில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.