இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த பின்னர் அமைதியான சரத் வீரசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

மாகாண சபைகள் நாட்டுக்கு அவசியமற்றவை என பலத்த குரல் எழுப்பி வந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த உயர்ஸ்தானிகராலயம் விடுத்த கோரிக்கைக்கு அமைய மேற்படி சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பாக்லே மற்றும் சரத் வீரசேகர இடையிலான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் இந்திய உயர்ஸ்தானிகருடனான இந்த சந்திப்பின் பின்னர், சரத் வீரசேகர, மாகாண சபைகள் தொடர்பாக கருத்துக்கள் வெளியிடுவதை காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைகள் முறைமை இலங்கைக்கு தேவையில்லை எனவும் அதனை ஒழிக்க வேண்டும் எனவும் ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்து வந்தார்.

எது எப்படி இருந்த போதிலும் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தமிழர்களுக்கு பகிர வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருந்தார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காணொளி ஊடான மாநாட்டின் போது இந்திய பிரதமர் இதனை வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையில் உள்ள சிங்கள தேசியவாத அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகள் 13வது திருத்தச் சட்டம் இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்டதாகவும் அதனை நீக்க வேண்டும் எனவும் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே இந்திய பிரதமருக்கும், இலங்கை பிரதமருக்கும் இடையிலான மாநாட்டில் மேற்படி விடயம் பேசப்பட்டுள்ளது.

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்பது இலங்கை மற்றும் இந்தியா இடையிலான ராஜதந்திர ரீதியான முக்கியமான சட்டம் என்பதுடன் அது இரு நாடுகளுக்கு இடையிலான நல்லறவு தொடர்பான விடயத்திலும் இந்தியாவின் பிராந்திய நலன் சார்ந்த பிரச்சினையிலும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.