தோட்டத் தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களை நிர்மானிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி வலியுறுத்து

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தோட்டத் தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களை நிர்மானிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் எதிர்கால திட்டத்தை மறு ஆய்வு செய்வதற்காக பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அதிகாரிகளுடனான சந்திப்பின் போது ஜனாதிபதியும், பிரதமரும் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.

இலங்கையின் பெருந்தோட்ட மக்களுக்காக 4,000 வீடுகள் கட்டும் பணி 2016 ல் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 669 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தநிலையில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் கட்டுமானத்தை தாமதப்படுத்துவதாக அதிகாரிகள் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

எனவே, அவர்களின் புதிய வீடுகளை அவற்றின் லயன் வீடுகளுக்கு அருகிலேயே நிர்மானிப்பது நன்மைகளை தரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய வாழ் விடயங்களை மாற்றாமல் தோட்ட சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவது முக்கியம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இந்த புதிய வீடுகளுக்கான கட்டுமானத்திட்டங்களை அரச பொறியியல் கழகம் மேற்பார்வையிட வேண்டும்,அத்துடன் உயர் தரத்தையும், சிறந்த தரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்க நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, தனியார் தோட்ட நிறுவனங்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

தோட்டத் துறையில் முன்பள்ளிகள், தொடக்கப் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளை அபிவிருத்திச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

பெருந்தோட்ட இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஒரு நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, பண்டாரவளை, ஹட்டன், நுவரெலியா மற்றும் எல்ல ஆகிய இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் இன்றைய சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது பெருந்தோட்டத்தையும், கிராமத்தையும் வேறுப்படுத்தாமல் அனைத்து வளர்ச்சி நடவடிக்கைகளும் ஒரே மாதிரி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.