இலங்கை பத்திரிக்கை பேரவைச் சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்கள்! அரசாங்கம் அறிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை பத்திரிக்கை பேரவைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போதைய உலகளாவிய ஊடக போக்குகள் மற்றும் தளங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் நடத்திய சந்திப்பின் போது இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஊடகத்துறையில் தற்போது அச்சு மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் தனி ஆட்கள், நிறுவனங்கள் அல்லது வணிகங்களுக்கு எதிராக நியாயமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுவரை காலமும் இலங்கையின் பத்திரிகை பேரவைச் சட்டம் இலங்கையின் செய்தித்தாள் தொடர்பான பிரச்சனைகளுக்கு மட்டுமே தீர்வுகளை கண்டு வருகின்றது.

இந்தநிலையில் ஏனைய சமூக ஊடகங்கள் மற்றும் பிற புதிய ஊடக தளங்களை உள்ளடக்கிய வகையிலேயே புதிய திருத்தங்கள் அமையவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.