கடந்த ஆட்சியில் மௌனிகளாக இருந்தவர்கள் இப்போது அரசியல் லாபத்திற்காக விமர்சனம் செய்கின்றனர்: வியாழேந்திரன்

Report Print Navoj in அரசியல்
74Shares

கடந்த ஆட்சியில் வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள், ரணில் அரசுக்கு வாக்கு சேகரித்து கொண்டு நாடாளுமன்றத்தில் அனைத்திற்கும் கையை உயர்த்தி அரசை காப்பாற்றிவிட்டு, தற்போது அவர்களது அரசியல் இலாபத்திற்காக எம்மை பார்த்து விமர்சிக்கின்றனர் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரளக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மாதவனை, மயிலத்தமடு பகுதியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அத்துமீறிய சில இனந்தெரியாத நபர்களால் அத்துமீறிய காணி அபகரிப்பு இடம்பெற்று வருகின்றது.

இந்த காணி அபகரிப்பு என்பது புதிதாக இடம்பெறுகின்ற விடயமல்ல. அத்துமீறி காணிகளை அபகரித்து தோட்டம் செய்கின்ற இந்த நிலவரம் பல ஆண்டுகளாக மாவட்டத்திலே அவ்வப்போது இடம்பெறுகின்ற வழமையான சம்பவமாகவே இருக்கின்றது.

ஆனால் இதற்கு ஒரு நிரந்தர முடிவை எடுக்கவேண்டிய நிலைப்பாடு இருக்கின்றது. உண்மையிலே மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள், ஏறாவூர்பற்று எல்லைக்குள் இவ்வாறு அத்துமீறி பிடிப்பது என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

இந்த விடயத்தில நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்; இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆனால் கடந்த காலங்களில் இவ்வாறான அத்துமீறல்கள் இடம்பெற்றபோது அவை எமது முயற்சியால் சட்டரீதியாக தடுத்து நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இப்போது ஏற்பட்டிருக்கும் அத்துமீறல்களுக்கும் உடனடியாக தீர்வு காண்பதற்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

ஏன் என்றால் மேய்ச்சல் தரைக்காக அது நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக, காலம் காலமாக எமது பண்ணையாளர்கள் பாவித்து வருகின்ற இடங்களாக இருந்து வருகின்றன.

இந்த பகுதியிலே இவ்வாறான சில அத்துமீறல்கள் அங்கே இருக்கின்ற கால்நடைகளை பாதிக்க செய்கின்றது, கால்நடைகளைச் சுடுவது, பண்ணையாளர்களுக்கான அச்சுறுத்தலை மேற்கொள்வது என்று பல்வேறுபட்ட அட்டகாசமான செயல்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன.

இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு முக்கிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் நாங்கள் தொடர்ந்தும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றோம்.

இருந்தும் ஒரு சில விசமத்தனமான தமிழ் அரசியல்வாதிகள்தங்களுடைய வங்குரோத்து அரசியலுக்காக சில நாட்களாக எனது பெயரைக் கூறி இவர் பார்த்துவிட்டு பேசாமல் இருக்கிறார், ஊமையாக இருக்கின்றார் என்ற கருத்துக்களை எல்லாம் சிலர் சொல்வதை நாம் பார்க்ககூடியதாக இருக்கின்றது.

இவ்வாறாக கடந்த தேர்தலிலே மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் கூறிவருவதை காண முடிகின்றது. இவர்களுக்கு ஒரு விடயத்தை நான் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன், 2015 இல் இருந்து நாங்களும் இந்த அரசியலில் இருக்கின்றோம்.

அன்றிலிருந்து எங்களுடைய மக்களுக்கான பிரச்சனைகள் ஏற்பட்ட போதெல்லாம் நாங்கள் தொடர்ச்சியாக கள ரீதியாக நின்று போராடியிருக்கின்றோம்.

சில பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருந்தாலும், சில பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாத சூழ்நிலை அப்போது இருந்தது.

ஆனால் நாங்கள் அந்த நேரம் கள ரீதியான போராட்டங்களில் களத்தில் நின்றபோது வீட்டிலேயே கேட்டு வெற்றி பெற்று வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தவர்கள்தான் இவர்கள், எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் இவர்கள் கலந்து கொண்டதான வரலாறு இல்லை.

ஒரு சிலர் முகத்தை காட்டியிருந்தாலும் பல போராட்டங்களுக்கு அவர்கள் வந்ததே இல்லை. அவ்வாறானவர்கள் தான் இப்போது எண்கள் மீது பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இந்த மாதவனை, மயிலத்தமடு பிரச்சனை தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்தே இது தொடர்பான விடயங்களை நாங்கள் கொழும்பில் இருந்து கொண்டு மேற்கொண்டு வருகின்றோம், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனும், நானும் சென்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமல்ராஜபக்சவுடன் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கலந்துரையாடியிருந்தோம்.

பின்னர் மகாவலி அதிகார சபைக்குச் சென்று இராஜாங்க அமைச்சருடனும், அதிகாரிகளுடனும் 45 நிமிடங்களுக்கு மேல் குறித்த விடயம் தொடர்பாக தெளிவாக அவர்களுக்கு நாங்கள் எடுத்துரைத்திருந்தோம்.

அவர்களும் அதனை நேரில் வந்து பார்வையிடுவதாக சொல்லியிருக்கின்றார்கள், நான்அது தொடர்பில் வருகின்ற நாட்களில் அறிக்கை ஒன்றினை கோரியிருக்கின்றேன்.

அதே போல் மிக விரைவில் இது தொடர்பான அவசரமான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றேன்.

இதற்கானதொரு நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கின்றது.

இந்த தருணத்தில் நான் எமது மக்களுக்கு சொல்லிக் கொள்ளும் ஒரேயொரு விடயம், நாங்கள் உரிமையோடு கூடிய அபிவிருத்தி சார்ந்த அரசியலை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

எங்கள் மக்களுக்கு தேவை பிரச்சனையை வைத்து யாரும் அரசியல் செய்வது அல்ல, எண்கள் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது எங்கள் மக்களுக்கான தீர்வு, அந்த பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக நாங்கள் சகல மட்டங்களிலும் பேச்சு வார்த்தைகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றோம் என்பதை மக்களுக்கு தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் என்று கூறியுள்ளார்.