கூட்டமைப்பு வடக்கு - கிழக்கு தமிழர்களை பாதுகாக்க தவறி விட்டது : பூ.பிரசாந்தன்

Report Print Kumar in அரசியல்

கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சிகளின் வால்களில் தொங்கிக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்றுவதற்கே முற்பட்டார்களே தவிர, வடக்கு - கிழக்கு மக்களை பாதுகாக்க முற்படவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிகளின் வால்களில் தொங்கிக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்றுவதற்கே முற்பட்டார்களே தவிர, வடக்கு - கிழக்கு மக்களை பாதுகாக்க முற்படவில்லை. இதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் சரியான பாடத்தினை புகட்டி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் நடைபெற்று மூன்று தினங்களிலேயே மாவட்ட செயலகத்தில் கூட்டத்தினை கூட்டி மாற்று இனத்தவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கையெடுத்தவர்கள் இன்று எங்களை குறை கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக மயிலந்தனை மேய்ச்சல் தரைப்பிரச்சினையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரை இணைத்து வசைபாடிக்கொண்டிருக்கின்ற அரசியல் தலைமைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்த காலத்தில் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக குறிப்பாக மேய்ச்சல் தரைக்காக 27311 ஹெக்டர்களை ஒதுக்குவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டது.

2010ஆம் ஆண்டு 08மாதம் 18ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபருக்கும், அபிவிருத்திக் குழுவுக்கும் நில அளவை செய்வதற்காகவும் காணி பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதிக்காகவும் எமது கட்சியினால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

அதனடிப்படையில் கோறளைப்பற்று வடக்கு பிரதேசத்தில் 3584 ஹெக்டர்களும், கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்தில் 9969 ஹெக்யர்களும், ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் 6098ஹெக்டர்களும், போரதீவுப்பற்று பிரதேசத்தில் 285 ஹெக்டர்களும், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 2008 ஹெக்டர்களும்,மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் 5097ஹெக்டர்களுமாக, 27311ஹெக்டர்கள் மேய்ச்சல் தரைக்காக சந்திரகாந்தனின் தூர நோக்கிய சிந்தனைக்கு அமைவாக காணி பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதிபெறப்பட்டு, நில அளவை செய்து அது வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில்தான் மாகாணசபை 2012ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.

அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி வந்தது. விவசாய அமைச்சராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இருந்தார். அவர்களால் இதனை வர்த்தமானியில் பிரசுரிக்கமுடியாமல் போனது.

நானும் கட்சி தலைவர் சந்திரகாந்தனும் நேரடியாக மயிலத்தமடுவுக்கு சென்று பண்ணையாளர்களுடன் பிரச்சினைக்குரிய பகுதிகளுக்கு சென்று நிலத்தினை நில அளவை செய்வதற்கு அடையாளப்படுத்தியதே சந்திரகாந்தன்தான்.

ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சந்திரகாந்தனுக்கு அந்த இடம் தெரியாது என்று கருத்து கூறுகின்றார்.

அவருக்குத்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்கு குளம் இருக்கின்றது,எங்கு காணியிருக்கின்றது என்ற தெரியாத நிலைமை இருக்கின்றது. அதன் காரணமாகத்தான் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடைபெற்று மூன்று தினங்களுக்கு பின்னர் மாவட்ட அபிவிருத்திக்குழுவினைக் கூட்டி பன்சேனையில் 49.5ஏக்கர் காணிகளை சோளப்பவர் செய்யவென சகோதர இன நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு நடவடிக்கையெடுத்தவர் இவர்தான்.

இந்த நடவடிக்கையினை நாங்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் எங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியிருந்தோம். அதேபோன்று அந்த வருடத்தில் மே மாதம் அந்த காணியினை வழங்கியிருந்தார்.

அதேபோன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் காயான்கேணியில் சகோதர இனத்தினை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு காணியினை வழங்க முன்வந்திருந்தார்.

ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைப்பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் இஞ்சிஇஞ்சாக காணிகளையும், நீர்நிலைகளையும் அளந்துவைத்திருப்பவர் சந்திரகாந்தன் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

மேய்ச்சல் தரைக்கான காணிகள் ஒதுக்கப்படும் சூழலில் மாகாணசபைகள் கலைக்கப்பட்டதன் காரணத்தினால்தான் வர்த்தமானியில் பிரசுரிக்கமுடியாமல் சென்றிருந்தது.

மயிலத்தமடு பகுதிக்கு நாங்கள் நேரடியாக சென்று நிலங்கள் தொடர்பில் கவனம் செலுத்திவந்தோம்.அங்கு நிலங்கள் அபகரிக்கப்படவில்லை,ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் எள்ளுப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களையும் நாங்கள் அகற்றினோம்.

ஆனால் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இருந்த காலப்பகுதியில்தான் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த சிங்களவர்கள் வந்து நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தும் அதனை அன்றிருந்த மாவட்ட அரசாங்க அதிபர் தடுத்த சம்பவமும் நடைபெற்றது.

சிங்களவர்கள் மீண்டும் காணிகளை பிடிப்பதற்கு இடம்கொடுத்தவர்கள் இவர்கள்தான். அன்று அந்த பிரச்சினையை தீர்க்கமுடியாதவர்கள் இன்றுவந்து சந்திரகாந்தன் சிங்களவர்களை குடியேற்றியதாக கூறுகின்றனர்.

சிங்களவர்கள் கூறியதை சரியாக மொழிபெயர்ப்பு செய்யாத சூழ்நிலையிலேயே சந்திகாந்தன் காணிகளை கொடுத்ததாக குறிப்பிடுகின்றனர் என்று கூறியுள்ளார்.