2009ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை மாதவணை, மயிலத்தமடு அத்துமீறலைக் கண்டும் காணாமல் இருந்து விட்டு தற்போது பலர் புனிதர் போல் பேசுகின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
மாதவணை மயிலத்தடு மேய்ச்சற்தரை அயல் மாவட்டத்தவர்களால் அத்துமீறி கைப்பற்றப்படுகின்றமை தொடர்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தை மிக முக்கியமாகக் கையாண்டு அதில் வெற்றியும் கண்டது.
ஆனால், நாங்கள் அதனைத் தம்பட்டம் அடிக்கவில்லை, சலசலப்பில்லாமல் செய்து முடித்தோம். தற்போதைய ஆட்சி ஆரம்பிக்கப்பட்டதும் அது மீண்டும் தலைதூக்கியுள்ளது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பேசுபொருளாக அமைந்துள்ள எமது மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் பாரம்பரிய மேய்ச்சற்தரையான மாதவணை, மயிலத்தமடு பிரச்சினை தொடர்பில் பலரும் பலவாறு கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.
சிலர் அதன் வரலாறுகள் தெரியாமல் பிதற்றுகின்றனர்.
எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கை மீட்கப் புறப்பட்டவர்கள் பதவிகளையும், பவுசுகளையும் வகித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே எமது இப்பிரதேசத்தில் முதன் முதலில் ஆக்கிரமிப்பு இடம்பெற்றது.
பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே இவ்வாக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதனை அவர் கண்டும் காணாமல் இருந்ததாக நாங்கள் யாரும் சொல்லவில்லை. அங்கு வந்து குடியேறிய சிங்கள மக்களே தெரிவித்த காணொளிகளில் தான் அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் அவர்களுக்கு எவ்வித இடைஞ்சல்களும் இருந்ததில்லை எனவும் அந்த அத்துமீறிய குடியேற்றக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதனை நாங்கள் சொல்லிக் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தின் ஆக்கிரமிப்பு வரலாறு தெரியாமல் அவர் ஊடக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றார்.
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெற்றதாக அவர் தெரிவிக்கின்றார்.
மீண்டும் ஆக்கிரமிப்பு என்றால் ஆக்கிரமிப்பு ஆரம்பித்தது எப்போது என்று கூறவேண்டும். ஆனால் அதனைக் கூறமாட்டார்கள்.
ஏனென்றால் அவர்கள் வாயாலேயே அவர்களின் காலத்தில்தான் என்று கூறமுடியாது தானே அதுதான் காரணம்.
2009ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட இந்த ஆக்கிரமிப்பு 2015ம் ஆண்டு நல்லாட்சி காலம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை ஆட்சியில் பங்காளியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் இவ்விடயத்தை மிக முக்கியமாகக் கையாண்டு அதில் வெற்றியும் கண்டோம்.
ஆனால், நாங்கள் அதனைத் தம்பட்டம் அடிக்கவில்லை.சலசலப்பில்லாமல் செய்து முடித்தோம்.
முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைசசர் கி.துரைராசசிங்கம் அவர்களின் தலைமையில் இச் செயற்திட்டம் மிகக் கட்சிதமாக மேற்கொள்ளப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.
2015இன் பின் மாதவணை, மயிலத்தமடு அத்துமீறலை மிகப் பாரிய பிரயத்தனத்துடன் தடுத்து நிறுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை இவ் அத்துமீறலைக் கண்டும் காணாமல் இருந்து விட்டு தற்போது பலர் புனிதர் போல் பேசுகின்றனர்.
அரச தரப்பில் இருக்கும் சிலரின் கருத்துக்கள் ஏதோ அவர்கள் 2015ன் பின்னர் தான் அரசியலுக்கு வந்தவர்கள் போலுள்ளது.
அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை அனைத்தையும் வாரி வழங்கிவிட்டு, அத்துமீறில்களை, காணி அபகரிப்புகள் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்து விட்டு 2015ம் ஆண்டின் பின் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு முட்டுக் கொடுத்தமையால் தான் இவை இடம்பெற்றது என பொய்களையும், புனைகதைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
மயிலத்தமடு, மாதவணை பிரதேசம் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது என்கின்ற விடயத்தையே அதற்கு முன்பிருந்தவர்கள் எவரும் அறியவில்லை.
இது மாவட்ட அதிகாரத்திற்குள் வரும் விடயம் என்று தான் அனைவரும் நினைத்திருந்தார்கள். அவ்விடயத்தை ஆராய்ந்து உரிய இடங்களுக்குச் சென்று இறுதியில் மகாவலி அதிகார சபையின் மூலம் அத்துமீறிய குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களுக்கெதிராக வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அவ்விதம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் புதிய ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ச அவர்கள் பதவியேற்றதைத் தொடந்து இவ்வாக்கிரமிப்பு செயற்பாடுகள் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்தன. பின்னர் தற்போது அது உக்கிரமடைந்த அத்துமீறலாக இடம்பெற்று வருகின்றது.
இந்நில ஆக்கிரமிப்பு விடயத்தில் இத்தனை செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் எதுவுமே அறியாதவர்கள் போன்று தற்போதைய அரசாங்கத்திடம் மண்டியிட்டுக் கொண்டிருப்பவர்கள் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான பிதற்றல்களை நிறுத்தி எமது மாவட்டத்தின் சொத்தினை எமது மாவட்டத்தவர்களே பயன்படுத்த வேண்டும். அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இது பாரம்பரியமாக எமது மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தும் பிரதேசம்.
அதுவும் காட்டு வளங்கள் அருகிக் கொண்டு வரும் இந்நிலையில் அவ்வளத்தினையும் பாதுகாத்து அவர்கள் இந்நிலத்தை மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை எவரும் ஆக்கிரமிப்புச் செய்ய அனுமதிக்க முடியாது.
கையாலாகாத அரசியல் வங்குரோத்து நிலைமையினை மறைக்க அனைத்து சேறுபூசல்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது திணித்து அவர்கள் மீட்பர்கள் என்ற பட்டத்தினைத் தக்க வைக்கப் பார்க்கின்றார்கள். இந்த வங்குரோத்து நிலைமைக்கு எதிர்வரும் காலங்களில் மக்கள் தகுந்த பாடங்களை வழங்குவார்கள்.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக் கொடுத்தது, முட்டுக் கொடுத்தது என்று சொல்லிச் சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் இலாபம் தேடுபவர்களின் இயலுமை தற்போது எமது மக்களுக்கு விளங்கிக் கொண்டு வருகின்றது.
தொல்லியல் பிரச்சினை, நில ஆக்கிரமிப்புகள், இராணுவ அடக்குமுறைகள் என்று எமது மக்கள் மீது அனைத்து விதமான அத்துமீறல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கான பதிலையோ, தீர்வினையே இன்று அரசாங்கத்துடன் சேர்ந்திருப்பவர்கள் செய்யாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பழியைச் சுமத்தி அரசியல் இலாபம் தேட நினைக்கின்றார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் பொய்களை கேட்டு மக்கள் சற்று தளர்ந்துள்ளார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதுவே தொடர்ந்தும் இடம்பெறும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றர்கள். இந்த நினைப்பு வெகு காலத்திற்கு நிலைக்காது என்று தெரிவித்துள்ளார்.