அரசின் அராஜகத்துக்கு ஓரணியில் நின்று முடிவு கட்டுங்கள் - மத பீடங்களின் அறிக்கைகளுக்கு ஜே.வி.பி வரவேற்பு

Report Print Rakesh in அரசியல்

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசின் சர்வாதிகாரத்துக்கு எதிராக அமரபுர பீடம், ராமன்ய பீடம் ஆகிய பௌத்த பீடங்களும், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும் கிளர்ந்தெழுந்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம்.

அனைத்து மத பீடங்களும், மதம் சார்ந்த அமைப்புகளும் எம்முடன் ஓரணியில் நின்று இந்த அரசின் அராஜக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்."

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

"அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடித் தீர்ப்பும் இந்த அரசின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட சிறந்த உதாரணமாகும்" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"எனினும், 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் ராஜபக்ச அரசு திருத்தங்களை மேற்கொண்டு அதை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட்டால் எதிரணிகளுடன் சேர்ந்து நாமும் எதிர்ப்போம்" எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

"அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான போராட்டத்தில் எதிரணியினர் மற்றும் நாட்டு மக்கள் ஆகியோருடன் பௌத்த பீடங்களும் கைகோர்த்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"20ஆவது திருத்தத்துக்கு எதிராக பௌத்த பீடங்களும், கத்தோலிக்க ஆயர் பேரவை உள்ளிட்ட ஏனைய மதம் சார்ந்த அமைப்புகளும் ஊடகவியாளர் மாநாடுகளை நடத்தியும், அறிக்கைகளை வெளியிட்டு விட்டும் மட்டும் இருக்கக்கூடாது. செயற்பாட்டு நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார்.

சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் அரசமைப்பின் 20ஆவது திருத்த முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு பெளத்தத்தின் நான்கு பிரதான மத பீடங்களில் இரண்டான அமரபுர பீடமும், ராமன்ய பீடமும் கொழும்பில் பகிரங்க செய்தியாளர் மாநாடு கூட்டி, அறிக்கை வெளியிட்டு அரசியல் தலைவர்களையும் பொதுமக்களையும் கோரியிருக்கின்றன.

அதேவேளை, 20ஆவது திருத்தச் சட்ட வரைவைக் கைவிடுமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கையூடாக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே 20வது திருத்த வரைபில் உள்ள சகல பரிந்துரைகளையும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேற்ற உயர்நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இது தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமாரவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.