முதல் சுற்றில் அரசாங்கம் கொரோனாவை ஒழிக்கவில்லை! மனுஷ நாணயக்கார வெளிப்படுத்தும் விடயம்

Report Print Steephen Steephen in அரசியல்

கொரோனா தடுப்பு விடயத்தில் அரசியல்வாதிகள் புள்ளிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை காரணமாக முதல் சுற்றில் கொரோனா தடுப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசியல் கோஷமாக பயன்படுத்தியதே அன்றி நாட்டில் கொரோனாவை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் இருந்து வந்தவர்களால் பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் கொரோனா பரவி இருக்கலாம். அப்படி இல்லை என்றால் இலங்கையில் அந்த வைரஸ் இருந்துள்ளது.

தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதற்காக அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலில் முதல் கட்டத்தை மூடி மறைத்தது.

கொரோன வைரஸ் ஒழிக்கப்பட்டது என்று அரசாங்கம் தேர்தலில் பிரச்சார கோஷம் பயன்படுத்தியே அன்றி, நாட்டில் கொரோனா ஒழிக்கப்படவில்லை.

பிரன்டிக்ஸ் நிறுவனத்தினரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொது சுகாதார அதிகாரிகளை பயன்படுத்தவில்லை என்பதை தெளிவாக கூறியுள்ளனர்.

விமான நிலையத்தின் ஊடாக அண்மையில் வந்த சீனப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்படவில்லை. எமக்கு தெரியாமல் எத்தனை பேர் தனிமைப்படுத்தப்படாமல் இலங்கைக்குள் வந்திருப்பார்கள்?.

வெளிநாடுகளில் தொழில்களுக்காக சென்ற லட்சக்கணக்கான இலங்கையர்கள் வெளிநாடுகளில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

எத்தனை பேரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் இயலுமை அரசாங்கத்திற்கு இருப்பதாக இராணுவ தளபதி கூறுகிறார்.

அப்படியானால் ஏன் வெளிநாடுகளில் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர மறுக்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை வரவழைப்பதற்கு பதிலாக பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் பணிப்புரியும் இந்தியர்களை இலங்கை அழைத்து வர அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுவே அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதற்கான சிறந்த உதாரணம்.

தமக்கு நெருக்கமானவர்களுக்கு உதவி செய்ய போய் அரசாங்கம் கொரோனா பரவ இடமளித்துள்ளது. இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.