ஊடகவியலாளரின் பாதுகாப்பை அரசே உறுதிப்படுத்த வேண்டும்!அது பிரதான கடமை என்று அமைச்சர் அமரவீர எடுத்துரைப்பு

Report Print Rakesh in அரசியல்

சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தப்படுவது குறித்து வேண்டிய இடங்களுக்குச் சென்று உண்மைத் தகவல்களைச் சேகரிப்பதற்கான உரிமை ஊடகவியலாளர்களுக்குக் காணப்படுகின்றது. எனவே, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் பிரதான கடமையாகும் எ ன சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களில் சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பில் தகவல் சேகரிப்பதற்காகச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஊடங்களில் வெளியான செய்திகள் மூலம் அறியக்கிடைத்தது.

இது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளேன். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனி ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை.

ஊடகவியலாளர்களுக்கு இவை தொடர்பில் ஆராய்வதற்கு உரிமையுள்ளது. அந்த உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட மாட்டாது.

சமூக வலைத்தள ஊடகவியலாளர்கள் சிலர் பொறுப்புடன் செயற்படாவிட்டாலும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுகின்றனர்.

அவ்வாறானவர்களுக்கான அதற்கான இடமளிக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் பிரதான கடமையாகக் கருதுகின்றோம். எனவே, அவர்களுக்கு வேண்டிய இடங்களுக்குச் சென்று சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தப்படுவது குறித்து உண்மை தகவல்களைச் சேகரிக்க முடியும்.

அந்த வாய்ப்புக்களை நாம் நீக்கப்போவதில்லை. அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை. சில பலவந்தர்களும் தனவந்தர்களும் இருக்கலாம். அவர்களை நாம் கவனத்தில் எடுக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.