நவராத்திரியை முன்னிட்டு 40 சைவ ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயை வழங்கிய பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

நவராத்திரியை முன்னிட்டு, தெரிவு செய்யப்பட்ட 40 சைவ ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இன்று நடைபெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக முழு உலகமும் அச்சுறுத்தல் மற்றும் நெருக்கடி எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பத்தில் கூட அரசாங்கம் என்ற வகையில் இந்து சமயத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமை என பிரதமர் கூறியுள்ளார்.

சைவ ஆலயங்களில் அறங்காவலர் சபையின் தலைவர்கள் அலரி மாளிகைக்கு வந்து பிரதமரிடம் நிதியுதவிக்கான காசோலைகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர்,

இவ்வாறான கஷ்டமான சந்தர்ப்பத்தில் இந்து ஆலயங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி, சமயத்தை பாதுகாக்கவும் நாட்டுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்க இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறேன்.

மத விவகார அமைச்சர் என்ற வகையில், இந்து தர்மம் மற்றும் இந்து சமயத்தை பாதுகாக்க வேண்டியது கடமை.

ஆரம்பிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிகரமான நிறைவடையும் என எதிர்பார்க்கின்றேன். நவராத்திரி காலத்தில் இந்த புண்ணிய நடவடிக்கைகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலயங்களில் வைபவங்களின் போது சுகாதார வழிக்காட்டல்கள் முன்னெடுக்கப்படும் என விசேடமாக எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, நாமல் ராஜபக்ச, ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.