பொம்பியோ விஜயம் - அமெரிக்காவின் நெருக்குதல்களுக்கு வளைந்து கொடுக்கப்போவதில்லை என்கிறது இலங்கை

Report Print Dias Dias in அரசியல்

அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வந்து இலங்கைத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தும் போது மிலேனியம் செலன்ஞ் கோப்ரேஷன் உடன்படிக்கை (எம். சி. சி) மற்றும் படைகளின் அந்தஸ்து தொடர்பான உடன்படிக்கை (சோபா) ஆகியவை தொடர்பில் அமெரிக்காவிற்கு இலங்கை அரசாங்கம் வளைந்து கொடுக்கப்போவதில்லை என்று உயர்மட்ட அரசாங்க வட்டாரம் ஒன்று கூறியுள்ளதாக கட்டுரையாளர் பி.கே பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மைக் பொம்பியோவின் இலங்கை விஜயம் தொடர்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எம்.சி.சி குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட குணரூவன் கமிட்டி அந்த உடன்படிக்கை இலங்கையின் அரசியலமைப்புடனும், சட்டத்துடனும் இசைந்து போகக்கூடிய முறையில் மீளவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தது.

அதற்கு அமெரிக்கர்கள் இணங்குவார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். சோபாவைப் பொறுத்தவரை அதை இப்போது நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ள முடியாது.

ஏனென்றால், நாம் ஒவ்வொன்றாகவே இந்தப் பிரச்சினைகளை கையாள விரும்புகிறோம்” என்றும் அந்த உயர்மட்ட வட்டாரம் கூறியது.

எம்.சி.சியைப் போன்றே சோபாவும் இலங்கையின் சட்டத்தையும், அரசியலமைப்பையும் மீறுகிறது என்று காரணம் காட்டி இலங்கையின் தேசியவாதிகளிடம் இருந்தும் ஊடகங்களிடமிருந்தும் கடும் கண்டனத்தை எதிர்நோக்கியுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கான சுற்றுலாவின் ஒரு பகுதியாக பொம்பியோ அக்டோபர் இறுதியில் இலங்கைக்கு வரவிருக்கிறார். அவர் இப்போது அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘குவாட்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற கூட்டணியை ஒன்றிணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார்.

ஜப்பானுக்கு விஜயம் செய்த பொம்பியோ புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் ஜொஷிகிட் சுகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புதிய பிரதமர் முன்னாள் பிரதமர் சின்ஷோ அபேயினதும் அமெரிக்காவினதும், சீன எதிர்ப்புக் கொள்கைக்கு இணக்கமானவராக இருக்கிறார் என்ற நம்பிக்கை அமெரிக்க இராஜாங்க அமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவுடனான தமது உறவுகளை வலுப்படுத்த விரும்பும் பொம்பியோ இந்து சமுத்திரத்தில் இலங்கையின் அமைவிடத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அதையும் தங்களுடன் இணங்கிப் போகக்கூடிதயதாக மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார்.

இலங்கை, மியன்மார், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் துறைமுகங்களை நிர்மாணிக்கும் பணிகளின் ஊடாக சீனா அதன் கடல்சார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. அந்த துறைமுக வசதிகளை சீனா எதிர்காலத்தில் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடும்.

சீனாவை தொலைவில் வைத்திருப்பதற்காக அமெரிக்கா செப்டெம்பர் 10 ஆம் திகதி மாலைதீவு அரசாங்கத்துடன் பாதுகாப்பு உறவு முறைக்கான கட்டமைப்பு தொடர்பான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டது.

இலங்கையில் சீனா செய்கிற முதலீடுகள் மற்றும் வழங்குகிற கடனுதவிகள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இலங்கை சீனாவில் தங்கிவாழும் ஒரு நாடாக மாறிவிடும் என்று வாஷிங்டன் பயப்படுகிறது.

இலங்கையில் சீனாவின் முன்னேற்றங்களைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திடவும் 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எம். சி. சி உடன்படிக்கையைப் பயன்படுத்துவதன் மூலம் தனக்கொரு பொருளாதாரத் தளத்தைத் தோற்றுவிப்பதற்கும் அமெரிக்கா விரும்புகிறது.

சீனக் கடன் பொறிக்குள் விழுந்து பெய்ஜிங்கிடம் சுயாதிபத்தியத்தை இழக்க வேண்டாமென்று இலங்கைக்கு அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை செய்திருக்கிறது.

அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. ரெப்லிற்ஸ் அண்மையில் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் சீற்றத்திற்கு உள்ளானது.

இலங்கைக்கும் மூன்றாம் நாடொன்றிற்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்குவதன் மூலம் இராஜதந்திர நடைமுறைகளை மீற வேண்டாமென்று சீனத் தூதரகம் அவரிடம் கேட்டுக்கொண்டது.

அதே நேர்காணலில் அமெரிக்கத் தூதுவர் இலங்கையுடனான சீனாவின் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து சந்தேகங்களைக் கிளப்பியதுடன் சுதந்திர வர்த்தகம் தொடர்பான உலகளாவிய நியமங்களும் தராதரங்களும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

இலங்கையினதும் அமெரிக்காவினதும் நன்மை கருதி ஒரு நியாயமான முதலீட்டுச் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாடுகளுக்கிடையிலான கூட்டுப்பங்காண்மை திறந்ததாக, வெளிப்படையானதாக, ஒளிவு மறைவற்றதாக, பரஸ்பரம் பயனுடையதாக இருக்க வேண்டுமென்று அமெரிக்கா நம்புகிறது என்று குறிப்பிட்ட அலைனா ரெப்லிற்ஸ், அவ்வாறு தான் சீனாவுடனான இலங்கையின் உறவுகள் அமைந்திருக்கின்றன என்றால் அதை அமெரிக்கா உற்சாகப்புடுத்தும் என்றும் கூறியிருந்தார்.

“ இலங்கை மற்றைய நாடுகளுடனான உறவுகளைப் பொறுத்தவரை பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கக்கூடாதென்பதே எமது அக்கறை. நிலைபேறானதும் சுற்றாடலுக்கு நேசமானதும் கட்டுப்படியாகக் கூடியதுமான விளைபயன்கனைத் தரக்கூடிய சிறந்த ஒப்பந்தங்கள் குறித்து இலங்கையினால் பேச்சுவார்த்தை நடத்தப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

‘மண்டலமும் பாதையும்’ செயற்திட்டத்தின் கீழான உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனக் கம்பனிகளுக்கு ஒதுக்கப்படுகிறது என்றும் கேள்விப் பத்திர செயன்முறைகள் தெளிவற்றவையாக இருக்கிறதென்றும் 2019 உலக வங்கி ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினாரர்.

இலங்கை ஒரு சுயாதிபத்தியமுடைய நாடு. இலங்கை மற்றைய நாடுகளுடன் கொண்டிருக்கக்கூடிய உறவுமுறைகளின் தரம் குறித்து அறிவுறுத்தல்களை விடுப்பது அமெரிக்காவின் வேலை அல்ல.

ஆனால், நாடுகளுக்கிடையிலான கொடுக்கல்வாங்கல்கள் திறந்த வெளிப்படைத் தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்றும் உள்நாட்டு மக்களின் ஏனைய பொருளாதய நலன்களை உறுதிப்படுத்தி தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்குவதானால் அதுவே நல்லது என்றும் தூதுவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார்.


You may like this video....