ரிசாட் பதியுதீன் எந்தவொரு தவறும் செய்யவில்லை: மன்னார் பிரதேசசபை தலைவர்

Report Print Ashik in அரசியல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனை குறி வைத்து இந்த அரசாங்கம் பழி வாங்கிக் கொண்டு இருக்கின்றதாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தெரிவித்துள்ளார்.

மன்னார் தனியார் விடுதி ஒன்றில் நேற்றையதினம் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் பழிவாங்கல் என்றால் கடந்த காலம் என்று எல்லோருக்கும் தெரியும். 52 நாட்கள் உதவி செய்யவில்லை என்ற காரணத்திற்காகவும், மூன்று மாதம் அவர்களின் அரசியலுக்கு உதவி செய்யவில்லை என்பதற்காகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்தி சிறுபான்மை சமூகத்தை அடக்க ஆள வேண்டும் என்று தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனை கைது செய்வதற்கு தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக நாங்கள் அறிகின்றோம். ரிசாட் பதியுதீன் எவ்வித தவறுகளும் செய்யவில்லை.

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு இடம்பெயர்ந்த மக்கள் பேரவை என்ற அமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அங்கு இருக்கின்ற மக்களை சொந்த மண்ணில் வந்து வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அந்த அமைப்பு புத்தளம் மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து கிராமங்களின் தலைவர்கள் ஊடாக கடிதங்களை பெற்று குறித்த கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு வழங்கி மன்னாரிற்கு செல்வதற்கான அனுமதியை வழங்கிய பின் தான் அமைச்சர் மங்கள் சமரவீர பணத்தை விடுவித்து தந்ததன் பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு புத்தளம் மாவட்டத்தில் இருந்து மக்களை மன்னாரிற்கு அழைத்து வந்த நிலையில் மக்கள் வாக்களிப்பை மேற்கொண்டனர்.

தேர்தல் முடிவடைந்து 6 தினங்களில் குறித்த அமைப்பு பணத்தை மீண்டும் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

ஆனால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மீது அரசியல் பழிவாங்கல் இடம் பெற்று வருகின்றது. அவருடைய சகோதரர் றியாஜ் பதியுதீனை எவ்வித குற்றமும் இன்றி கடந்த 6 மாதங்கள் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கி பல்வேறு முறைப்பாடுகளை பதிவு செய்தார்கள்.

எனினும் றியாஜ் பதியுதீன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்று அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அரசியல் பழிவாங்கல் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நூறு பேர் கையெழுத்து இட்டு மீண்டும் அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறிய போது முன்னாள் அமைச்சர் அவருக்கு பக்க பலமாக இருந்தார்.

ரிசாட் பதியுதீனை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ரிசாட் பதியுதீன் எந்த ஒரு பிழையும் செய்யவில்லை. அவரை நிம்மதியாக மக்கள் பணியை மேற்கொள்ள விடுங்கள்.

அவர் பிழை செய்திருந்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர் எந்த ஒரு பிழையும் செய்யவில்லை.

மக்களை சட்ட ரீதியாக வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.