கொரோனா தொற்று நோய், பொருளாதார பிரச்சினைகள், வாழ்க்கை செலவு அதிகரிப்பு, அதிகாரிகளுக்கு எதிரான அடக்குமுறை ஆகிய அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே தீர்வு 20ஆவது திருத்தச் சடட்ம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக தற்போது முழு நாடும் அச்சத்திலும், வெறுப்பிலும் உள்ளது.
இப்படியான நேரத்தில் அரசாங்கம் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவது குறித்து நாங்கள் கவலையடைகின்றோம்.
நாட்டில் உள்ள பெரிய பிரச்சினை 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதா என நாங்கள் கேட்கின்றோம்.

முழு உலகமும் தற்போது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக போரடி வருகிறது.
அனைத்து நாடுகளும் போட்டிப் போட்டுக்கொண்டு கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வரும் நேரத்தில் எமது நாட்டில் மாத்திரம் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளனர்.
இதன் காரணமாக கொரோனா இப்படி பரவி வருகிறது. அரசாங்கம் இதனை விட கூடிய அக்கறையும் செயற்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
கொரோனாவை கட்டுப்படுத்திய சிறந்த நாடு என ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் கூட்டத்தில் கூறினார்.
இதனை கூறி ஒரு வாரம் செல்லவில்லை கொரோனா தொற்று நோய் பயங்கரமான நிலைமைக்கு வந்துள்ளது எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.