பத்து கட்சிக் கூட்டு:அடுத்தது என்ன?

Report Print Dias Dias in அரசியல்

ஈழத்தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் பெருந்தோல்வியின் பேர் அதிர்ச்சியில் உறைந்து இருந்தனர். அடுத்தது என்ன என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவ்வேளை ஈழத்தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு என்கின்ற அரசியல் தலைமைகள் சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது என கட்டுரையாசிரியர் தி.திபாகரன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மரண வீட்டில் ஒன்றுகூடல் என்பது ஒரு மன அமைதியைத் தருவது போல, தமிழ் அரசியல் தலைமைகள் ஓரணியில் இருந்தமை ஆறுதல் அளிக்கும் விடயமாக அன்று மக்கள் மத்தியில் காணப்பட்டது.

ஆனால் இந்த ஐக்கியம் சில மாதங்களுக்குள் இரண்டாக உடைந்தமையானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோர்வையும் ஏற்படுத்திவிட்டது. இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியதோடு முதலாவது உடைவு ஏற்பட்டது.

இதனால் இரண்டு அரசியலணிகள் உருவாகின. இதன் பின்னர் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதானது தமிழ் மக்களுக்கு ஒரு சிறு ஆறுதலைத் தந்தது.

இந்த தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வின் போது தமிழ் மக்கள் உற்சாகத்துடன் கூட்டமைப்புக்குப் பதிலான ஒரு மாற்றுத்தலைமை எழுச்சி பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஆனால் இரண்டாவது எழுக தமிழ் எழுச்சி நிகழ்விற்கு முன்னதாகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடைமுறையில் பேரவையில் இருந்து வெளியேறியமையால் பேரவை இரண்டாக உடைந்தது.

விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு அணியும், கஜேந்திரகுமார் தலைமையில் மற்றொரு அணியுமாக இரண்டு எழுக தமிழ் நிகழ்வுகள் நடந்தேறின. இதனால் ஈழத்தமிழர் அரசியலில் மூன்றாவது அணியாக விக்னேஸ்வரன் தலைமையிலான அணி தோற்றம் பெற்றது.

இதில் சுரேஸ் பிரேமச்சந்திரனும், கூட்டமைப்பால் ஒடுக்கப்பட்ட ஏனயவர்களும் விக்னேஸ்வரனுடன் இணைந்து கொண்டனர்.

இவ்வாறு தமிழ் அரசியல் தலைமைகள் தம்முள்ளே முட்டிமோதி, பல்வேறு துண்டுகளாகப் பிளவுபட்டு, தமிழ்த் தேசியத்தை சிதைத்து, சீரழித்து பல்வேறு கட்சிகளாக நவக்கிரகங்கள் போல் ஒன்பது திசைகளிலும் செயற்பட்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டனர்.

இந்த சீரழிவின் விரக்தியில் இருந்த மக்கள் போகும் வழி தெரியாது சிங்கள தேசிய கட்சிகளுடனும், ஒட்டுக்குழுக்களுடனும் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் வெற்றி பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டனர். தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு இருந்தால் இத்தகைய சீரழிவுகள் ஏற்பட்டு இருக்காது.

இந்தப் பின்னணியிற்கு தான் திலீபனின் நினைவு நாள் அனுஸ்டிப்பு தொடர்பான சர்ச்சைகள் எழுந்து அரசின் அடக்குமுறை அதிகரித்த போது அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் கைகோர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

இந்த வலுக்கட்டாய இணைப்பினால் தியாகியின் நினைவு நாளில் இணைந்தவர்கள் தொடர்ந்தும் இந்த இணைவைத்தக்கவைக்கவும், சிந்திக்கவும், செயற்படவும் தயாராக வேண்டும்.

திலீபனுடைய தியாகத்தையும், உணர்வுகளையும் மதித்து தாயகத்தில் ஏற்பட்டிருக்கும் மக்கள் அலைகளை தமிழ் தலைமைகள் அனைத்தும் கண் முன்னால் நிதர்சனமாய் கண்டனர். அவர்கள் ஒன்றுபடத் தவறினால் மக்களால் அனைவரும் தூக்கி எறியப்படக்கூடிய சோகம் காணப்பட்டது.

இந்நிலையில் 10 கட்சிகளின் கூட்டு உருவானது. எப்படியோ இது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு பொய்க் கூட்டாக அல்லாமல் ஒரு செயல்பூர்வமான கூட்டாக அமைய வேண்டும் என்பதே வரலாற்றுத் தேவையாக உள்ளது.

திலீபன் நாளை முன்னெடுப்பது என்பது அவருடைய கொள்கையை முன்னெடுப்பதாகும். எனவே திலீபனின் முதலாவது கோரிக்கையான சிங்கள குடியேற்றத்தை தாயகத்தில் தடுத்து நிறுத்தல் என்பதனை உடனடியாகத் தமிழ்த் தலைவர்கள் கையில் எடுத்து தாயகப் பகுதியில் இன்று சிங்கள அரசு மேற்கொண்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டங்களை மிக அவசரமாக முன்னெடுக்க வேண்டும்.

ஏனெனில் இன்று கோட்டாபய தலைமையிலான சிங்களப் பௌத்த பேரினவாதம் முதலில் கிழக்கை முற்றுமுழுதாக விழுங்குவதற்கான தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்துவிட்டது. எனவே இந்தப் பேராபத்தை உணர்ந்து தமிழ் தலைவர்கள் வேகமாக உள்நாடு, வெளிநாடு தழுவிய வெகுசனப் போராட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

இல்லையேல் கிழக்கின் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கின்றோம் என்ற கோதாவில் புதிதாக வேண்டுமென்றே பௌத்த சமயம் சார்ந்த பொருட்களைப் புதைப்பதும் பின்னர் அவற்றைத் தோண்டி எடுப்பது போல எடுப்பதும், இதனை காரணம் காட்டியே புதிய புத்த விகாரைகளை அமைப்பதும், பின்னர் அந்த புத்த விகாரைகளுக்கு சேவகம் செய்வதற்கென்ற போர்வையில் சிங்கள மக்களைக் புதிதாக குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மிகச் சாதுரியமாகச் செய்து வருகின்றது.

இவ்வாறு தான் D .S. சேனநாயக்க அரசாங்கம் 1949 ஆம் ஆண்டு ஜி. ஜி.பொன்னம்பலத்தினை அமைச்சராக நியமித்து, அவரை அரவணைத்து அவரின் உதவியுடன் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா குடியேற்றத் திட்டம், திருகோணமலை மாவட்டத்தில் அல்லை - கந்தளாய் குடியேற்றத் திட்டங்கள் ஆகியவற்றை விவசாய அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள மக்களைக் குடியேற்றினார். இவ்வாறு அந்தத் தமிழ் தாயகப் பகுதிகளை சிங்கள மயப்படுத்துவதிலும், கிழக்கை துண்டாடுவதிலும் வெற்றி பெற்றுவிட்டார்.

இதன் மூலம் தமிழர் தாயகம் என்பதை நிர்மூலம் ஆக்குவதற்கான முதலாவது பொறியை ஜி.ஜிபொன்னம்பலத்தின் உதவியுடன் டி .எஸ் சேனநாயக்க வெற்றிகரமாக அரங்கேற்றினார். அன்று டி .எஸ் சேனநாயக தொடங்கி வைத்த சிங்களமயமாக்கல் பணியை இன்று கோட்டபாய முடித்துவைக்க உள்ளார்.

அதாவது டி. எஸ். சேனநாயக்காவினால் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றத் திட்ட அபிலாசைகளை முற்றிலும் நிறைவேற்றி வைக்கும் பணியை தற்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கையில் எடுத்துள்ளார்.

சுதந்திரத்தை உடன் அடுத்த காலத் தமிழ் தலைவர்கள் இளைத்த இமாலய தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு அன்று நடந்த குடியேற்றம் போன்று இனியும் நடக்கக்கவிடாது தடுக்க வேண்டும். தாயகம் இல்லையேல் தமிழினம் இல்லை.

ஆதலால் சுதந்திரத்தைத் தொடர்ந்து அன்று போல் இன்றும் பாரிய சிங்களக் குடியேற்றங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில்,வடகிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதற்கு இன்று 10 கட்சிகளும் இறுக்கமாக இணைந்து உடனடியாகத் தமக்கிடையே நடைமுறைச் சாத்தியமான சரியான உடன்பாட்டிற்கு வரவேண்டும்.

அதற்கமைய ஒரு வேலைத் திட்டத்தை உருவாக்கி, அதற்கான செயற்பாட்டுக் குழுவை நியமித்து அத்தகைய செயற்பாட்டுக் குழுவிற்கு செயற்திறன் மிக்க தகுதியான தலைவரையும், நிர்வாகிகளையும் தெரிவு செய்ய வேண்டும். அவர்கள் உடனடியாக வடகிழக்கிலும், கொழும்பிலும், வெளிநாடுகளிலும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அடுத்து 20 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்த் தலைமைகள் முற்றாக நிராகரிக்க வேண்டும். ''மூஞ்சூறு தான் போக வழியைக் காணோம், விளக்கு மாற்றையும் காவியதாம்'' என்பது போன்ற செயலில் "சிங்கள மக்களின் ஜனநாயகத்தையும் பாதுகாக்கப்போகிறோம்" என்று தேவையற்ற வேலைகளில் தலையிடாமல், பிதற்றாமல் தமிழ் பேசும் மக்களின் நோக்கு நிலையிலிருந்து இந்தச் திருத்தச் சட்டத்தால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.

இலங்கையின் ஜனாதிபதி என்பவர் பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளின் தளபதி என்ற அதியுயர் அதிகாரத்தைப் பெற்றவர். இன்று இலங்கை தீவில் இராணுவம் வீங்கிப் பெருத்திருக்கிறது. இவ் இராட்சத ராணுவ அணிகள் வட கிழக்கிலேயே அதிகம் நிலை கொண்டிருப்பதனால் அவர்களால் இலகுவில் தமிழ் மக்களை கபளீகரம் செய்திட முடியும்.

எனவே இத்தகைய ஜனாதிபதியின் அதிகார அதிகரிப்பு என்பது தமிழ் மக்களின் அழிவிக்கும், ஒடுக்குமுறைக்கும் மேன்மேலும் வழியமைக்கும் என்ற அடிப்படையில், தமிழர் நோக்கு நிலையிலிருந்து. இந்த 20வது யாப்பு சீர்திருத்தத்தை தமிழ்த் தலைமைகள் முற்றுமுழுதாக நிராகரித்து, எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்ற கருத்து பெரிதுப்படுத்தப்பட்டு சர்வதேசமெங்கும் பரப்பப்பட வேண்டும். அடுத்து புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் பற்றிய விடயத்தில் அதிக கவனமெடுத்து, தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதான வகையில் வடக்கு,கிழக்கு இணைந்த சுயாட்சி அல்லது சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தை வலியுறுத்தி அதற்கான போராட்டங்களையும், அரசியல் வேலைத்திட்டங்களையும் இப்பொழுதே முன்னெடுக்க வேண்டும்.

எனவே இன்று இருக்கின்ற இந்த சூழலைப்பயன்படுத்தி உடனடியாக ஒரு செயற்பாட்டுக் குழுவையும், செயற்பாட்டு குழுவின் தலைவரையும் நியமித்து போதிய திட்டமிடலுடன் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் விமோசனத்திற்கான அரசியல் வேலைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

இல்லையேல் திலீபனின் நாளில் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியைப் பயன்படுத்தி தமிழ்த் தலைமைகள் தங்கள் சுயநலத்திற்காக நாடகம் ஆடியவர்கள் ஆகவும் நடைமுறையில் எதிரிக்கு சேவகம் செய்தவர்களாகவுமே காணப்படுவர்.

ஆதலால் உடனடியாக மேற்படி 10 கட்சிகளின் கூட்டும் ஒன்றுகூடி போராடுவதற்கான ஒரு செயற்பாட்டு குழுவை உருவாக்கி போராட்டத்துக்கான செயற்திட்டத்தை வரைந்து செயல்பட வேண்டும். இதுவே உடனடியானதும் அவசர அவசரமானதுமான தேவையாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.