இலங்கையின் பீதிக்கு நல்லாட்சியே காரணம் - இப்படிக் கூறுகின்றார் பீரிஸ்

Report Print Rakesh in அரசியல்
65Shares

கடந்த அரசின் காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாடு இன்னும் பீதியிலேயே உள்ளது எனக் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக 2015 முதல் 2019 வரை நாட்டில் தேசிய பாதுகாப்பு மீது சர்வதேச அழுத்தம் இருந்தது. அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி, கிட்டத்தட்ட 30ஆண்டுகளாக நாட்டைச் சூழ்ந்திருந்த பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதில் உளவுத்துறையுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தார்.

குறிப்பாக, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு குடியேற்றவாசிகளை கையாள சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடவுச்சீட்டு வழங்கும்போது இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் சுற்றுப்புறங்களை முறையாக ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால், கடந்த காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. உதாரணமாக, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஐ.ஜி.பி. மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறிய கருத்துக்கள் அவர்கள் தேசிய பாதுகாப்பை எவ்வாறு கையாண்டன என்பதை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.