ரிஷாட் பதியுதீனை கைது செய்ய முடியாததையிட்டு சி.ஐ.டியினர் வெட்கப்பட வேண்டும்: கனக ஹேரத்

Report Print Thirumal Thirumal in அரசியல்

தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், அதற்கான ஐந்தாண்டு வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

உலகிலுள்ள மிகவும் பழமையான தேயிலை ஆராய்ச்சி நிலையங்களில் எமது நாட்டிலுள்ள இந்த ஆய்வு நிலையம் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.

அதற்கு 95 வருடகால வரலாறும் இருக்கின்றது. இலங்கையில் தேயிலை உற்பத்திக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.

இலங்கையில் தரமான தேயிலை உற்பத்திக்கும், 'சிலோன் டீ' என்ற நாமத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் போதுமானளவு ஆலோசனைகளையும், ஆய்வு உதவிகளையும் குறித்த நிறுவனம் வழங்கியுள்ளது.

இலங்கையில் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு உத்தேசித்துள்ளோம். 300 மில்லியன் கிலோகிராம் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் அதனை 350 மில்லியன் கிலோகிராமாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்.

இன்னும் ஐந்தாண்டுகளில் அதற்கான இலக்கு அடையப்படும். அதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 22ஆம் திகதி நிச்சயம் நிறைவேற்றப்படும்.

மேலும், ரிஷாட் பதியுதீனை கைது செய்ய முடியாததையிட்டு சி.ஐ.டியினர் வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.