மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதலுக்கு இந்த நாடு உள்ளாக்கப்படக்கூடாது! வியாளேந்திரன்

Report Print Navoj in அரசியல்
224Shares

சியோன் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதோடு மீண்டுமொரு தடவை இப்படியானதொரு பயங்கரவாத தாக்குதலுக்கு இந்த நாடு உள்ளாக்கப்படக்கூடாதென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு, புதூர் பகுதியில் வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாட்டிலே பாதுகாப்பு முக்கியம். நாட்டிலே மக்கள் சந்தோசமாகவும், சமாதானமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும், நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது.

அதேபோன்று தான் நாட்டினுடைய மக்களுக்கான பாதுகாப்பு தொடர்பாகவும் அரசாங்கம் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகின்றது.

உங்களுக்கு தெரியும் கடந்த வருடம் ஏப்ரல் 21 முழு இலங்கையையும் உலுக்கிய பயங்கரவாத குண்டுதாக்குதல், இந்த பயங்கரவாத குண்டுத்தாக்குதல் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திலும் இடம்பெற்றது.

சஹரான் குழுவினுடைய இந்த பயங்கரவாத குண்டு தாக்குதலால் நாட்டினுடைய சுற்றுலாத்துறையில் ஒரு பாரிய பின்னடைவு ஏற்பட்டது மட்டுமல்ல, கடந்த அரசாங்க காலத்திலேயே தான் இது நடைபெற்றது.

இதனால் பாதுகாப்பிலே மக்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டது. அந்த அடிப்படையில் இப்போதைய அரசாங்கம் குறித்த குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்களை விசாரிப்பதிலும் அது தொடர்பான விடயங்களை ஆராய்வதிலும் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.