20 ஆவது திருத்தம் தொடர்பில் தீர்மானிக்க இன்றைய தினம் கூடவுள்ள பொதுஜன பெரமுன கட்சி கூட்டம்

Report Print Ajith Ajith in அரசியல்

20 ஆவது திருத்தத்தில் பெரிய மாற்றங்களைச் செய்யுமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று கூட்டப்படவுள்ளது.

இதனையடுத்து இன்றைய தினம் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக்குழு கூட்டமும் இடம்பெறவுள்ளது.

இந்த இரண்டு கூட்டங்களும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளன.

இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் சர்ச்சைக்குரிய திருத்தம் குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட வாய்ப்பு கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த திருத்தத்தில் உள்ள உப பிரிவுகள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

ஜனாதிபதியையும், பொதுஜன பெரமுன அரசாங்கத்தையும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்த தேசியவாத சக்திகளிடமிருந்து கூட 20வது திருத்தத்துக்கு விமர்சனம் வெளியிடப்பட்டு வருவதாக வீரவன்ச அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. எனினும் யோசனையில் உள்ள சில உட்பிரிவுகள் சமூகத்தில் வலுவான எதிர்ப்பை உருவாக்கியுள்ளன என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களில் ஆளும் கூட்டணியை வெற்றியை நோக்கி நகர்த்த உதவிய தேசியவாத சக்திகளின் கருத்துக்களுக்கு அரசாங்கம் செவிசாய்ப்பது நல்லது என்றும் ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.