தமிழ் தலைமைகளின் பொய்யான இலட்சியமும் கொள்கை திட்டமற்ற போலி அரசியலும்

Report Print Dias Dias in அரசியல்

திட்டங்கள்,கொள்கைகள் எதுவுமின்றி பொய்யான வெறும் இலட்சியம் , பொய்யான கொள்கை பற்றிப் பேசும் தமிழ்த் தலைமைகள் கடந்த 11 ஆண்டுகளாக ஈழத்தமிழரின் அரசியல் பரப்பில் தோல்விகளை மட்டுமே வெகுமதிகளாக தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு ஈட்டிக் கொடுக்கின்றன என கட்டுரையாசிரியர் அ. மயூரன், எம்.ஏ. தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

களத்தில் வலம் வருகின்ற எந்தவொரு அரசியல் தலைமைகளிடமோ, கட்சிகளிடமோ எந்த விதமான நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டகளும் கிடையாது. இவர்களிடம் வெறும் வரண்ட கற்பனையான இலட்சிய வாதங்களும் கொள்கைகளுமே உண்டு.இந்த இலட்சிய வாதங்களையும், கொள்கைகளையும், கோசங்களையும் மேடையில் மட்டும் முழங்கும் தலைவர்களால் எதனையும் சாதித்திட முடியாது.

போராட்ட திட்டங்கள் எதுவும் இன்றி பெரும் கொள்கைகளையும், இலட்சியங்களையும் பிரகடனப்படுத்தும் இந்தப் போலித் தலைவர்கள் உண்மையில் ஏமாற்றுக்காரர்களாகவும், மக்கள் விரோதிகளாகவுமே நடைமுறையில் காணப்படுகிறனர்.

மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு முன்னர் ஆசிரியர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. அது போலவே மக்களை வழிநடத்த புறப்பட்டிருக்கும் தலைவர்களையும் வழி நடத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது.

இன்றைய இந்த தமிழ் அரசியல் தலைமைகளுக்கான முதலாவது பாடம் தமிழ் மக்களை ஏமாற்றாது இருக்க கற்றுக்கொடுக்க வேண்டியதாகும்.

இரண்டாவது பாடம் இலட்சியம், கொள்கை என்று மக்களை ஏமாற்றும் மாயமான்களை அழித்து விடாது நடைமுறைக்கான செயல் திட்டங்களை முதலில் அவர்கள் முன்வைக்க வேண்டும்.

மூன்றாவது பாடம் அத்தகைய செயல் திட்டங்களை அவர்கள் முன்னின்று நடைமுறைப்படுத்தி அர்ப்பணிப்புடன் செயல்படுத்திக் காட்ட வேண்டும்.

தமிழ் மக்களின் பெயரால் அரசியல் செய்தி அதன் மூலம் சொத்துக்களை தேடுவதும் , தேடிய சொத்துகளையும் பரம்பரைச் சொத்துக்களையும் பாதுகாப்பது என்பதை தமது உள்ளார்ந்த இலட்சியமாகக் கொண்டு தமிழ் மக்களின் பெயரால் பொய்யான இலட்சியங்களையும், பொய்யான கோஷங்களையும் முன்வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் போலித் தலைவர்கள் மலிந்துள்ள காலம் இது.

இத்தகைய போலித் தமிழ் அரசியல் தலைவர்களை வழிநடத்த வேண்டிய அவசியம் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு பெரிதாக எழுந்துள்ளது. தலைமைகளை மக்கள் வழிப்படுத்தி நெறிப்படுத்த வேண்டிய அளவிற்கு தமிழ் அரசியல் தலைமைகள் பெரிதும் சீரழிந்து காணப்படுகின்றன.

பெரும் இலட்சிய வாதங்களையும், கொள்கை வாதங்களையும் முழங்குவதல்ல அரசியல். சிறு குழந்தையும் ''நான் வானில் பறப்பேன்'' என சத்தியம் செய்து இலட்சியவாதம் பேச முடியும்.ஆனால் முதலில் தரையில் ஒழுங்காக நடந்து காட்ட வேண்டும்.

இன்று நடைமுறையில் என்ன இருக்கின்றதோ அதை வைத்துக் கொண்டு தான் எதையும் நிர்மாணிக்க முடியும். ஆனால் இவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு பாய்ச்சலில் வானத்தில் எழுந்து பறப்போம் என்று போய் இலட்சியங்கள் பேசுகிறார்கள்.

இருக்கின்ற அரசியல் சூழமைவில் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே பேச வேண்டும். அதை விடுத்து வெறும் கற்பனாவாதத்தில் திளைத்து வானில் கோட்டை கட்டி தரையில் கட்ட வேண்டிய குடிசையை புறந்தள்ள முடியாது.

எனவே முதலில் இந்த அரசியல் கட்சிகள் தங்கள் இலக்கு என்ன? அந்த இலக்கை அடைவதற்கான கொள்கை என்ன ?அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம் என்ன ? என்பதை அறிவிக்க வேண்டும்.

அதாவது செயல் திட்டம் இல்லாமல் கொள்கை இருக்க முடியாது. அதாவது செயல் திட்டம் இல்லாத இலட்சியம், கொள்கை என்பன பாத்திரம் இல்லாத அமிர்த பானமாகும்.

இன்று எந்த கட்சிகளிடமும், தலைவர்களிடமும் இலட்சியம், கொள்கை, திட்டம் ஆகியவற்றில் தெளிவும் இல்லை.அறிவும் இல்லை என்பதாகவே அவர்களுடைய செயற்பாடுகள் அமைந்து காணப்படுகின்றன.

‘‘தீர்வு இல்லையேல் போர் வெடிக்கும்‘‘என 2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தமிழரசுக்கட்சி மகா நாட்டில் மாவை சேனாதிராஜா மேடையில் வாயால் வெடித்தார்.

வடமாகாண சபை நிர்வாகிகள் சங்க கூட்டம் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் ‘‘போர் ஓயவில்லை‘‘ என சூளுரைத்தார். ‘‘ கொழும்பு எம்மை ஏமாற்ற முயன்றால் அரசை முடக்கும் போராட்டம் வெடிக்கும்” என்றார் ” புலிகளின் பலம் பொருந்திய சக்தி தமிழ் கூட்டமைப்பு” என்று வாய்ச்சவடால் விட்டார்.

இவ்வாறு பல மேடைகளிலே "போர் வெடிக்கும், போர் வெடிக்கும்" என முழங்கி வாயால் வெடித்தவர் இறுதியாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தானே வெடித்துச் சிதறிப் போய்விட்டார்.

அவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ”இவ்வாண்டு (2016) முடிவுக்குள் எப்படியும் தீர்வு. "" '"தீபாவளிக்கு முன் தீர்வு." தீர்வின் பின்னே தைப்பொங்கல் பிறக்கும். தமிழ் மக்கள் இனியும் ஏமாற தயாரில்லை.‘ என எச்சரித்து "தீர்வுத்திட்டம் இல்லையேல் நாம் ஒரு தீர்மானத்தை எடுக்க நேரிடும்.

2 வாரத்துக்குள் நல்ல செய்தி வரும் என்றெல்லாம் பொய் உரைத்தார்கள். ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக எந்த நற்செய்தியும் கிட்டவில்லை என்பதுதான் ஈழத் தமிழரின் துரதிஸ்டவசசேமான அரசியலாய் மிஞ்சியது.

அவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ‘‘புதிய அரசியலமைப்பு வராவிடில் நாடு பேரழிவை சந்திக்கும். ஒற்றையாட்சி முறையை தகர்க்க வேண்டும்” என்றார். இது எல்லாம் தமிழ் தலைமைகளின் மேடை வாய்வாள் வீச்சுகள்.

உண்மையில் நடைமுறையில் இந்த அரசியல் பிரதிநிதிகளால் கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியலில் ஒரு அணுவாளவேனும் மாற்றமோ , திருத்தமோ எதுவும் ஏற்படவில்லை. தமிழ் மக்களுக்கான நீதி, தீர்வு என்பன எட்டாத தூரத்தை நேக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தமிழ் தலைமைகள் எடுத்த அரசியல் முடிவுகள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்து இருக்கின்றன.

2010 ஜனாதிபதித் தேர்தலில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் நேரடியாக களத்தில் நின்ற சரத் பொன் சேகாவை ஆதரிக்கும்படி மக்களை வழிநடத்தி தோற்றுப்போயினர்.

அடுத்து இரண்டு சிங்களத் தேசியக் கட்சிகளையும் ஆதரித்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தனர். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி நல்லாட்சி அரசாங்கதை பலப்படுத்தி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு முண்டு கொடுத்து தங்களின் பணப் பெட்டிகளை நிரப்பிக் கொண்டனர்.

இறுதியில் புலம்பெயர் மக்கள் முயன்று உருவாக்கிய சர்வதேச விசாரணை என்ற பொறிமுறையை சிங்கள பௌத்த இனவாத அரசுடன் இணைந்து கைகோர்த்து அதன் மூலம் நிர்மூலமாக்கி உள்ளக விசாரணை என இறங்கி இறுதியில் எதுவும் இல்லாமல் ஏமாற்றப்பட்டு விட்டதாக போலியாக ஒப்பாரி வைத்தனர்.

மறுபுறத்தே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நாம் தான் மாற்றுத் தலைமைகள், நாம் தான் தேசியத்திற்காக போராடுகிறோம்.

தேசியத்தை காவுகின்றோம், இலட்சியத்தை சுமக்கிறோம்" என்று நாடாளுமன்றம் சென்றவர்கள் இப்போது வெறும் கொள்கைகளையும், இலட்சிய வாதங்களையும் பேசித்திரிந்தவாறு எவ்விதமான போராட்டத் திட்டங்களுமின்றி மக்களை ஏமாற்றும் பொய்யான படலங்களை வெற்றிகரமாக அரங்கேற்றி வருகிறார்கள்.

தற்போது சிங்கள மக்களின் ஜனநாயகத்தையும் சேர்த்துப் பாதுகாக்கப் போகிறார்களாம்!? இதுவரை " ஒரு நாடு இரு தேசங்கள்" என்றார்கள் . ஆனால் இப்போது " ஒரு நாடு பல தேசங்கள்"" என்கிறார்கள்.

அப்படியாயின் இவர்களின் இத்தகைய உச்சகட்ட கொள்கைகளுக்கு என்ன விளக்கம்? இவர்களின் இலட்சியம்தான் என்ன? செயட் திட்டம்தன் என்ன? அதனைத் தெளிவாக மக்கள் முன் வையுங்கள். தயவு செய்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யோடும் அதைத் தொடர்ந்த தமிழ் தலைவர்களின் அங்கிடுதத்தி அரசியலாலும் நிலைகுலைந்துள்ள தமிழ் மக்களின் முன் நடைமுறைரீதியான செயல்திட்டங்களை கொண்ட தெளிவான அரசியல் நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட வேண்டும்.

தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய முன்னணியினர் தங்களது கொள்கை திட்டம் என்ன? செயல் திட்டம் என்ன ? என்பதை முதலாவதாக எழுத்து வடிவில் திட்டவட்டமாக முன்வைக்க வேண்டும்.

உண்மையில் தமிழ்த் தலைவர்கள் யாரிடமும் செயலுக்கான கொள்கை திட்டம் என்ற ஒன்று மருந்துக்கும் கிடையாது.

அதாவது இலட்சியம், கொள்கை என்ற பிரகடனங்களைவிடவும் பிரதானமானது நடைமுறைக்கான " கொள்கைத் திட்டமாகும்." அடுத்து அத்திட்டத்தின்படி நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட, போராட வேண்டும். இதனை எந்தக் கட்சிகளிடமும் காணமுடியவில்லை.

அதிகம் அதிகமாக இலட்சியம் , கொள்கை பற்றி பேசும் கஜேந்திரகுமார் அணியினருடம் இவை திட்ட வட்டமான வரைவுகளுடனும் அதற்கான நேரடி செயற்பாடுகளுடனும் காணப்பட வேண்டும்.

உண்மையில் அப்படி எந்தொரு கொள்கை திட்டத்தையும் அவர்களால் முடியாது. அப்படியாயின் இவை ஏமாற்று என்று சொல்வதைத் தவிர வேறு எத்தகைய வார்த்தையில் இதனை சொல்ல முடியும்?

அத்துடன் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியிடமும் கொள்கைத் திட்டங்கள் இல்லை. அவர்களும் சரியான ஒரு கொள்கைத் திட்டத்தை முன்வைத்து நடைமுறையில் செயல்படுத்த வேண்டும்.

மேலும் எந்த அரசியல் கட்சிகளிடமும் எந்தவிதமான புள்ளிவிபரங்களோ, ஆவணங்களோ கூட கிடையாது . குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கான ஆவணப்படுத்தல்களைக் கூட இந்தத் தமிழ் கட்சிகள் எதனால் இதுவரை செய்ய முடியவில்லை.

கூட்டமைப்பினரிடம் கடந்த காலத்தில் கனடாவிலிருந்து பெண்களுக்கான அபிவிருத்திக்காக கொடுக்கப்பட்ட 20 கோடி ரூபா பணத்துக்கான கணக்கை காணவில்லை என பெண்மணி ஒருவர் கணக்கு கேட்டு கேள்வி எழுப்பிய தற்காக அவர் கட்சியின் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

தமிழர் தரப்பில் நிதி மோசடிக்கு மின்கம்பத் தண்டனை வழங்கும் முறைமை கடந்த அண்மைக் காலத்தில் நிலவியதை கண்டோம். அத்தகைய நடைமுறையைக் கண்ட சமூகத்தில் இத்தகைய பெரும் கொள்ளைக்காரர்கள் தலையெடுத்து இருப்பது வியப்புக்குரியது.

இத்தகைய மோசடிகள் மீண்டும் தலைதூக்கி இருப்பது இந்த தலைமைகளின் மோசமான சுயநலன்களை காட்டுகிறது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக அவர்களின் வாழ்வாதார விருத்திக்காக வசூலிக்கப்படும் ஒரு சதப் பணமேனும் வீணடிக்கப்படுவதை அல்லது கொள்ளையடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களின் பெயரால் கொள்ளை அடிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

பழவியாபாரி அதிகாலையில் தனது பழக்கூடையில் இருந்து அழுகிய பழங்களை வெளியே வீசுவான் . ஆனால் தமிழரசுக் கட்சியோ அழுகிய பழங்களை தனது கூடையில் வைத்து ஏனைய பழங்களைப் அழுக வைக்கும் செயலை ஊக்குவிக்கிறது.

இவ்வாறு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் என்று இந்த அரசியல் கட்சிகளினால் திரட்டப்படும் நிதி சார்ந்து அவர்கள் சரியான கணக்குகளை பொது வெளியில் முன்வைக்க வேண்டும்.

இதில் விதிவிலக்காக விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது கணக்கு அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருந்தமை ஒரு நல்ல முன்னுதாரணம் ஆகும். இதனை பின்பற்றி ஏனைய கட்சிகளும் தங்களுடைய நேர்மையான கணக்குகளை பொதுவெளியில் முன்வைக்க வேண்டும்.

10 கட்சிகளும் தியாகி திலீபனின் பெயரால் கூட்டுச் சேர்ந்த இதுபோல் அவை அனைத்தும் இன்று தம்முடைய எதிர்கால கொள்கைத் திட்டம் என்ன? அவற்றுக்கான செயற்பாடுகள் என்ன? இலக்குகள் என்ன? என்பதை முதலில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் ஒரு புத்தி பூர்வமான செயல் திட்டத்திற்கு தயாராக வேண்டும். அதனை விடுத்து தியாகத்தின் பேரால் உருவாகிய மக்கள் எழுச்சியை தங்களின் அரசியல் நாடகச் சித்து விளையாட்டுக்களுக்காக பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் ஏமாற்றும் நடவடிக்கைகள் இனியும் வேண்டாம்.

தற்போது உடனடியாக அனைத்து கட்சிகளும் மக்களை ஏமாற்றுவதற்கான பொய்யான இலட்சியப் பிரகடனங்களுக்கு அப்பால் , போலியான கொள்கைப் பிரகடனங்களுக்கு அப்பால் உடனடியாக அடைய வேண்டிய இலக்குகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான ஒரு கொள்கை திட்டத்தை முன்வைத்து செயல்பட வேண்டும்.

நடைமுறைக்கான கொள்கை திட்டமும் அதன் அடிப்படையிலான செயல்பாடும் இல்லாத எந்த ஒரு அரசியல் தலைமையும் தமிழ் மக்களுக்கு தேவையில்லை. அப்படிச் செயல்பட முடியாதவர்கள் நாற்காலிகளில் குந்தி இருப்பதை விட்டுவிட்டுத் தங்கள் பதவிகளை துறந்து வீடுகளுக்குச் செல்வது தான் சிறந்தது. அந்த நாற்காலிகளில் சரியானவர்கள் வந்து அமர்வார்கள்.