சஜித் அல்லது அவருக்கு ஆதரவு வழங்கும் நபர் வீட்டில் ரிஷாட் மறைந்திருக்கக்கூடும்!

Report Print Thirumal Thirumal in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அல்லது அவருக்கு ஆதரவு வழங்கும் நபர் ஒருவரின் வீட்டில் ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்கக்கூடும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ரிஷாட் பதியுதீன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர் அங்கம் வகிக்கும் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவுடனேயே அவர் கலந்துரையாடியும் உள்ளார்.

எனவே, ரிஷாட் இருக்கும் இடம் சஜித்துக்கு தெரியும். கூடியவிரைவில் ரிஷாட்டை ஒப்படைக்குமாறு கோருகின்றோம். 20ஐ நிறைவேற்றுவதற்கு ரிஷாட்டின் ஒத்துழைப்பு தேவையில்லை.

ஏனெனில் எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, 22ஆம் திகதி இரவு '20' ஆவது திருத்தச்சட்டமூலம் நிச்சயம் நிறைவேறும்.

20 நிறைவேற்றப்படும் என்பது நாட்டு மக்களுக்கு நாம் வழங்கிய உறுதிமொழியாகும். அந்த உறுதிமொழியை நிச்சயம் நிறைவேற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.