20 நிறைவேற்றம் மாபெரும் வெற்றி! பிரதமர் மஹிந்த பெருமிதம்

Report Print Rakesh in அரசியல்
638Shares

அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் இன்றிரவு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்த அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் திருத்தங்கள் சகிதம் மூன்றிலிரண்டு பெரும்பான்டையுடன் இன்றிரவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இறுதி வாக்கெடுப்பில் (மூன்றாம் வாசிப்பு) 20இற்கு ஆதரவாக 156 பேரும், எதிராக 65 பேரும் வாக்களித்தனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

எனினும், அவர் தலைமையிலான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் '20' இற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதேவேளை, 20வது திருத்தத்துக்கு எதிராக ஆளுந்தரப்பில் இருந்துகொண்டே பகிரங்கமாகக் கருத்துக்களை வெளியிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

எதிரணியைச் சேர்ந்த 8 பேர் 20வது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

156 பேர் குறித்த திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையால் அது சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து ஆளுங்கூட்டணியினர் சபையில் எழும்பி நின்று கைகளைத் தட்டி - வெற்றிக் கோஷம் எழுப்பி பெரும் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.