இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கான பின்னணி நானே! சஜித் தெரிவிப்பு

Report Print Rakesh in அரசியல்

இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு பின்னணியில் இருந்தவனே இந்த சஜித் பிரேமதாச என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான பயணத்தடையை நீக்க வலியுறுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்த போது, கடந்த அரசின் ஜெனிவா இணை அனுசரணை என்ற காட்டிக்கொடுப்பின் விளைவே இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான பயணத்தடை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பதிலளித்துள்ளார்.

இந்நிலையில்,சஜித் பிரேமதாச இது தொடர்பில் பதிலளிக்கையில்,

இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு பின்னணியில் இருந்தவன் இந்த சஜித் பிரேமதாச. இதனை நீங்கள் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்கலாம்.

இப்போது இராணுவத் தளபதியாகவுள்ள சவேந்திர சில்வாவிடமும் கேட்கலாம். சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டும் என்று அவரின் பெயரைப் பிரேரித்தேன். பெரும் அழுத்தம் கொடுத்தேன். இது உங்கள் யாருக்கும் இன்று வரை தெரியாது. அதனால் தான் இப்போதும் அவர் மீதான அமெரிக்காவுக்கான பயணத்தடையை நீக்க வேண்டும் எனக் கோருகின்றேன் என்றும் கூறியுள்ளார்.