பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை: சமர்ப்பித்த ஆதாரங்களில் உள்ள குறைகளை சரி செய்ய ஆலோசனை

Report Print Ajith Ajith in அரசியல்
177Shares

இலங்கையின் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை பொறுத்தவரையில் பிரித்தானியாவில் உத்தியோகபூர்வமாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்படும் என்று எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.

எனினும் தீர்ப்பாயத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர வேண்டும் என்பதற்காக தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் உள்ள குறைகளை சரி செய்வது தொடர்பில் ஆலோசிப்பதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு உதவ இலங்கையின் லண்டன் உயர்ஸ்தானிகரகம் முன்வந்துள்ளபோதும் அந்த உதவியை பெற்றுக்கொள்ளும் இணக்கப்பாட்டை இன்னும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிடவில்லை.

இதற்கு பதிலாக உள்துறை அலுவலகம், உள்துறை அமைச்சிடம் இருந்து ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தடைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் இதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை தொடர்பில் மேன்முறையீட்டை மேற்கொள்ளமுடியும் என்று அது எதிர்பார்ப்பதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள தடை தவறானது என்று விசேட தீர்ப்பாயம் தெரிவித்ததன் பின்னர் இலங்கையின் லண்டன் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனா, தெற்காசிய வெளியுறவுத் துறை இயக்குநர் பேர்கஸ் ஆல்டுடன் zoom வழியாக தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்,

அத்துடன் பிரித்தானிய உள்துறை அலுவலக செயலாளருக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதன்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் மற்றும் தடை நீக்கப்பட்டால் சர்வதேச சமூகத்திற்கு ஏற்படவுள்ள ஆபத்துகள் தொடர்பான எந்தவொரு தகவலையும் பிரித்தானிய உள்துறை அலுவலகத்திற்கு உதவ தயாராக உள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கினால் விரோதங்களை புதுப்பிக்க மட்டுமே உதவும் என்ற வகையில் சில தமிழ் புலம்பெயர்வாளர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் கொழும்பின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.