சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பு இல்லை என்பதால் கட்சி மாறி ஆதரவு வழங்கினார்கள்: மஸ்தான் எம்.பி

Report Print Thileepan Thileepan in அரசியல்
150Shares

20 ஆம் திருத்தத்தில் அரசின் செயற்திட்டங்கள் எல்லா சமூகத்திற்கும் பயனுடையது என்பதால் பலர் அதற்கு ஆதரவளித்தார்கள். கட்சி மாறி ஆதரவளித்தவர்கள் சிறுபான்மை சமூகத்தினரே. சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பு இல்லை என்பதால் அவர்கள் கட்சி மாறி ஆதரவு வழங்கினார்கள் என வன்னி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நேற்று நியமனம் வழங்கி வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலின் போது அப்போதைய எமது ஜனாதிபதி வேட்பாளர் மீது அபாண்டங்களை கூறி இப்பகுதியில் விழ இருந்த வாக்குகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

அதேபோன்று நாடாளுமன்ற தேர்தலிலும் பல விதமான இனவாத கருத்துக்கள் பரப்பப்பட்டன.

அவை எல்லாவற்றையும் விடுத்து நாம் இனவாதிகள் அல்ல. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை நீங்கள் காட்டியதன் மூலம் நான் இரண்டாவது தடவையாகவும் நாடாளுமன்றம் சென்றுள்ளேன்.

சில கட்சியினுடைய பிரதிநிதிகள் வேலைவாய்ப்புக்காக ஒரு தொகை நிதியையோ அல்லது ஏதாவது உதவியையோ பெறுகிறார்கள். எமது கட்சியில் உள்ள சிலரும் அப்படி செய்வதாக கூறுகிறார்கள். ஆனால் எமது கட்சி அப்படியல்ல.

அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்தும் எமது கட்சியால் மக்களுக்காக வழங்கப்படுகின்றது. இதில் எந்த கையூட்டல்களும் இல்லை. அப்படி யாராவது பெற்றிருந்தால் தெரியப்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.

நாம் கிராம மட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கு ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் இவ் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளோம். இதனை எமது அரசாங்கம் உங்களுக்கு வழங்கியுள்ளது.

இதற்கு நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். எமது கட்சிக்கு நீங்கள் கிராமங்களில் இருந்து பலம் சேர்க்க வேண்டும். எதிர்காலங்களில் வரும் தேர்தல்களில் வாக்குகளை அதிகரிக்க வேண்டும். எமது கட்சிக்கான அங்கத்தவர்களை கூட்டுங்கள். இதனையே நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார்.